
Government marriage scheme : தமிழக அரசு சார்பாக ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு திருமண திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையானது தன் ஆளுகைக்குட்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல். திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருகிறது. மேலும், திருக்கோயில்கள் சார்பில் கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களை நிறுவி அறப்பணிகளை மேற்கொள்ளுதல், சித்தர்களுக்கும்,
அருளாளர்களுக்கும் விழா எடுத்து சிறப்பு செய்தல், பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கும், மாற்றுத்திறனாளி இணைகளுக்கும் சீர்வரிசைகளுடன் திருமணம் செய்து வைத்தல் போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த அரசு பொறுப்பேற்றபின், திருக்கோயில்கள் சார்பில் 2022 2023 ஆம் நிதியாண்டில் 500 இணைகளுக்கும், 2023 2024 ஆம் நிதியாண்டில் 600 இணைகளுக்கும். 2024 - 2025 ஆம் நிதியாண்டில் 700 இணைகளுக்கும். என மொத்தம் 1,800 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி இணைகளுக்கு திருக்கோயில் திருமண மண்டபங்கள் கட்டணமில்லாமல் வழங்கப்படுவதோடு இதுவரை 156 மாற்றுத்திறனாளி இணைகளுக்கு தங்கத் தாலி மற்றும் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
2025-2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் "இவ்வாண்டு 1,000 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் 4 கிராம் தங்கத் தாலி உட்பட ९.70,000/-மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் இன்று (2.7.2025) 32 இணைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை இன்று வழங்கி, வாழ்த்தினார்.
இணைகளுக்கு மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் எரிவாயு அடுப்பு, வெட் கிரைண்டர், மிக்சி, குக்கர். சமையல் பாத்திரங்கள், பூஜை சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் திருக்கோயில்கள் சார்பில் இன்றைய தினம் முதற்கட்டமாக, 576 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட கோயில்களில் இலவச திருமணத்திற்கு விண்ணப்பிக்க, திருமணம் நடைபெற விரும்பும் கோயிலில் குறைந்தது 21 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை சம்பந்தப்பட்ட கோயில் அலுவலகத்தில் பெறலாம் அல்லது இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (hrce.tn.gov.in) பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தகுதிகள்:மணமக்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.