
Police attacked a prisoner in Theni : போலீசார் தாக்கியதில் காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 27 அன்று, மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி மற்றும் அவரது மகள் நிகிதா ஆகியோர் மருத்துவமனையில் ஸ்கேன் எடுப்பதற்காக சென்ற நிலையில், கோயிலுக்கு வந்து சாமி கும்பிட சென்றுள்ளனர். அப்போது காரில் நகைகளை கழற்றி வைத்து விட்டு சென்றனர். தங்களது காரை பார்க்கிங் செய்ய அஜித்குமாரிடம் சாவி கொடுத்துள்ளனர். சாமி கும்பிட்ட பின்னர் காருக்கு திருப்பிய நிலையில் காரில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை காணாமல் போனதாக நிகிதா திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால், அஜித்குமார் உள்ளிட்ட 5 பேர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் அஜித்குமாரை மேலும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கோயிலுக்கு அருகிலுள்ள மாட்டுத் தொழுவத்தில் அவரை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கான வீடியோ காட்சிகளும் வெளியாகியிருந்தது. போலீசாரின் தாக்குதலில் உடலில் 44 காயங்கள் இருந்தன, குறிப்பாக கழுத்துப் பகுதியில் ஆழமான காயம் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். உளவியல் அழுத்தம், உட்புற ரத்தக் கசிவு மற்றும் சித்ரவதை ஆகியவையும் மரணத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார், மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வழக்கு முதலில் CBCID-க்கு மாற்றப்பட்டு, பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி CBI விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனிடையே தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் போலீசார் இளைஞர் ஒருவரை சரமாரியாக தாக்கிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சேர்ந்தவர் வழக்கறிஞர் பாண்டியராஜன்.இவர் கட்சிக்காரர் ஒருவருக்கு ஆதரவாக புகார் அளித்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் காவல் நிலையத்தில் பதிவான காட்சிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு விண்ணப்பித்திருந்தார்.
இதற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஜனவரி 14ஆம் தேதி காவல்நிலையத்தில் பதிவான வீடியோ காட்சிகள் வழக்கறிஞர் பாண்டியராஜனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகளை வழக்கறிஞர் ஆய்வு செய்த போது இளைஞர் ஒருவரை போலீசார் பிடித்து இழுத்து வந்து சரமாரியாக தாக்கும் காட்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சம்பந்தப்பட்ட இளைஞர் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சின்னச்சாமி என்பவது மகன் ரமேஷ் என்பதும், அவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்ததும் தெரிய வந்தது. இந்த காட்சிகளில் எதற்காக போலீசார் ரமேஷை தாக்கினார்கள் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இந்த சிசிடிவி காட்சிகளில் ரமேஷ் ஒவ்வொரு காவல்துறை அதிகாரியின் காலில் விழுந்து தன்னை விட்டு விடும்படி கெஞ்சும் போதும், அனைத்து காவல் துறையினரும் அவரை மாறி மாறி ஷூ ஆனால் மிதித்து தாக்கியதும்,மேலும் சரமாரியாக மாறி மாறி அவர் மீது தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்தது.
தேனி மாவட்டத்தில் இதேபோல புகார் மற்றும் வழக்குப்பதிவு செய்யாமல் பட்டியலின இளைஞர் ஒருவரை காவல் துறையினர் காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கிய சம்பவம் மீண்டும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் அபுதல்ஹா மற்றும் நான்கு போலீசாரை (மொத்தம் ஐந்து பேர்)ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.