காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக 25 நாட்களுக்கு மேல் போலீசார் திணறி வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய 32 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பவுள்ளனர்.
ஜெயக்குமார் மர்ம மரணம்
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த மாதம் காணாமல் போன நிலையில், அவரது உடல் பண்ணை தோட்டத்தில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் மிகப்பெரிய கல் கட்டப்பட்டிருந்தது உடல் கூறு ஆய்வில் தெரியவந்தது. முன்னதாக நெல்லை மாவட்ட காவல் ஆணையருக்கு எழுதியாக வெளியான கடிதத்தில் மரண வாக்குமூலம் என்ற பெயரில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனது மரணத்திற்காக யாரையும் பழி வாங்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் பெயரையும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணையை தொடங்கினர்.
undefined
காங். மூத்த தலைவர்களிடம் விசாரணை
காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு, ரூபி மனோகரன், தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர். பல குழுவாக பிரிந்து விசாரணை நடத்தியதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இறுதியாக ரூபி மனோகரன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த சூழ்நிலையில் தான் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து களத்தில் இறங்கிய சிபிசிஐடி போலீசார் சம்பவம் நடைபெற்ற இடம், ஜெயக்குமார் மரண வாக்குமூல கடிதம், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்தநிலையில் ஜெயகுமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சுமார் 32 பேருக்கு இன்று முதல் சம்மன்கள் அனுப்பப்படும் என சிபிசிஐடி தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
32 பேருக்கு மீண்டும் சம்மன்
ஒரு நாளைக்கு இரண்டு பேர் வீதம் விசாரிக்கப்படுவார்கள் என சி பி சி ஐ டி அலுவலகத்தில் இருந்து வெளியான தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அனைவரும் திருநெல்வேலி மாவட்ட சிபிசிஐடி தலைமை அலுவலகத்திற்கு தான் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் திசையன் விளைக்கு யாரும் அழைக்கப்பட போவதில்லை எனவும் தகவல்கள் கூறப்படுகிறது. மாவட்ட காவல்துறை விசாரித்த அனைவரிடமும் மீண்டும் விசாரணை செய்வதற்கான சம்மன்கள் அனுப்பும் பணி இன்று முதல் தொடங்கும் என சிபிசிஐடி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.