
காவிரி வழக்கு மீண்டும் தீர்ப்பாயத்திற்கு திருப்பி அனுப்பப்படமாட்டாது எனவும் முழுமையான விசாரணையும் உத்தரவுகளையும் உச்சநீதிமன்றமே விதிக்கும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கர்நாடகா, தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது.
கடந்த 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காவிரி நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன.
இதுகுறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கர்நாடக வழக்கறிஞர் தமது வாதங்களை முன்வைத்தார்.
அதைதொடர்ந்து இன்றும் இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் காவிரி வழக்கு மீண்டும் தீர்ப்பாயத்திற்கு திருப்பி அனுப்பப்படமாட்டாது எனவும் முழுமையான விசாரணையும் உத்தரவுகளையும் உச்சநீதிமன்றமே விதிக்கும் எனவும் தெரிவித்தனர்.
நடுவர் நீதிமன்றத்தில் வைத்த வாதங்களை நீதிமன்றத்தில் வைக்க வேண்டாம் எனவும் நடுவர் மன்றத் தீர்ப்பில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை உச்சநீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.