
பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரியும், அந்த நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் கமலஹாசனை கைது செய்ய கோரியும் இந்து மக்கள் கட்சியினர் போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.
நடிகர் கமலஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக்பாஸ் வீட்டில் நமீதா, ஓவியா, அனுயா, கஞ்சா கருப்பு, வையாபுரி, சக்தி, சினேகன், உள்ளிட்ட 15 பேர் பங்கேற்றனர்.
ஆங்கில டிவியில் தொடங்கி ஹிந்தியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்ப பட்டு வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது தமிழ்நாட்டில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் நடிகர் நடிகைகள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இதில் கவர்ச்சியான ஆடைகள் அணிவதையே நடிகைகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை செய்ய கோரி ஏற்கனவே இந்து மக்கள் கட்சியின் சார்பில் நுங்கம்பாக்கத்தில் ஆர்பாட்டம் நட்த்தினர்.
இந்நிலையில், இன்று கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரியும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலஹாசனையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் போலீசில் மனு அளித்துள்ளனர்.