
சேலத்தில், பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த மோட்டூரில் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. தண்டவராயபுரம் பகுதியில், மாணவ - மாணவிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் இருந்த பள்ளிக் குழந்தைகள் பலர் படுகாயமடைந்தனர்.
பேருந்து கவிழ்ந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர், மாணவ - மாணவிகளை மீட்டு ஆத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பள்ளி பேருந்து விபத்துக்குள்ளான தாண்டவராயபுரம் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். சாலையை அகலப்படுத்தக்கோரியும் அவர்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து, அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு வந்த போலீசார், அவர்களை கலளந்து செல்ல கூறியதை அடுத்து, பொதுமக்கள் களைந்து சென்றனர்.
சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.