
நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்ட 8 பேர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009 ஆண்டு தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகைகள் குறித்த செய்தி ஒன்று வெளியானது. அதில் நடிகைகள் குறித்து மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளதாக குற்றசாட்டு எழுந்தது.
இதனால் அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமார் குறிப்பிட்ட நாளிதழ் மீது வழக்கு தொடர்ந்தார். மேலும் நடிகர் சங்கம் சார்பில் கண்டன கூட்டமும் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய நடிகர்கள் சூர்யா, சரத்குமார், விவேக், அருண் விஜயகுமார், விஜயகுமார், சேரன், ஸ்ரீப்ரியா, சத்யராஜ் உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர்கள் குறித்து மிக கேவலாமாக விமர்சித்தனர்.
இதுகுறித்து ரசாரியா என்பவர் உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
இதைதொடர்ந்து இந்த வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நடிகர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.