
வட சென்னையில் துணை மின் நிலையங்கள் அமைக்க போதுமான இடம் கிடைக்காததால் மின்சாரம் சீராக வழங்க முடியவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் தினமும் ஒவ்வொரு துறை சம்பந்தமாக எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது வடசென்னையில் துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும் என திமுக எம்எல்ஏ சேகர்பாபு கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, சென்னையை பொருத்தவரை சீரான மின்சாரம் கொடுக்கப்படாததற்கு காரணம் துணை மின் நிலையங்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளது தான் எனவும், வடசென்னை பகுதிகளில் இடம் கிடைக்காத காரணத்தினால் துணை மின் நிலையங்கள் அமைக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
சென்னைக்கு சீரான மின்சாரம் கொடுப்பதற்கு அதிகளவில் துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தங்கமணி விளக்கமளித்தார்.