
கிருஷ்ணகிரி
ஐம்பது வருடங்களாக கோரிக்கை வைத்து போராடி தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்டப் பாலம் கட்டி நான்கு ஆண்டுகளே ஆனநிலையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அதனை சரிசெய்யவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த அரசம்பட்டியில் இருந்து பண்ணந்தூர் கிராமத்திற்குச் செல்ல உயர்மட்டப் பாலம் கோரி கடந்த 50 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து போராடி வந்தனர்.
மக்களின் கோரிக்கையை ஒருவழியாக ஏற்று, கடந்த 2011-12-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் மூலம், தெண்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க அரசு முடிவெடுத்தது. அதற்கான நிதி ரூ.599 இலட்சத்தையும் ஒதுக்கியது. இந்த பாலம் 2015-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்து.
இந்தப் பாலத்தின் வழியாக நாள்தோறும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த பாலம் கட்டி முடித்து நான்கு ஆண்டுகளுக்குள்ளாகவே பாலத்தில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. சுமார் 215 மீ. தொலைவுள்ள இப்பாலத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
கனரக வாகனங்கள் பாலத்தின் மீது செல்லும்போது, பாலம் அதிர்வதை உணர முடிவதாகவும் மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர். மேலும் பேருந்து, லாரிகளில் வேலைக்கு செல்லும் மக்கள் பாலத்தின் மீது வாகனங்களில் செல்லும்போது பயத்துடன் செல்வதாக தெரிவிக்கின்றனர்.
எனவே, பாலத்தின் உறுதித் தன்மையை அரசு உறுதிப்படுத்த வேண்டுமெனவும், பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரிசெய்ய வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.