கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பாக இன்றைய சட்டசபை கூட்டத்தில் அதிமுக கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. மேலும் கலவரத்தை செய்ய வேண்டும் என அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
சட்டசபையில் அதிமுக அமளி
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 4வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வருகிறது. இந்த சூழலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புச்சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகைதந்தனர். தொடர்ந்து கூட்டத்தொடர் தொடங்கியதும் விஷச் சாராய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இருக்கையில் அமருமாறு சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார்.
சட்ட விதிகளை மீறி கேள்வி நேரத்தின்போது முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினரை சபாநாயகர் வெளியேற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக கடந்த 20ம் தேதி ஒரு மணி நேரத்திற்கு மேலாக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசி இருக்கிறார்கள் அதற்கு தானும் சரியான விளக்கத்தை அளித்துள்ளதாகவும், அன்று அவையில் இருந்து முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக தனது கருத்தை பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.
கள்ளக்குறிச்சி- ஸ்டாலின் விளக்கம்
மேலும், அவையின் விதிமுறைப்படி கேள்வி நேரம் முடிந்த பின்பு தான் மற்ற பணிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்த முதலமைச்சர், கலவரத்தை செய்ய வேண்டும் என அதிமுகவினர் திட்டமிட்டு செய்வதாகவும், திமுக 40-40 என்ற விகிதத்தில் வெற்றி பெற்றுள்ளது அதிமுகவினரின் மனதையும் கண்ணையும் உருத்துவதாகவும் குறிப்பிட்டார். கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதோடு, குற்றவாளிகள் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இறந்தோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் தரப்பட்டதோடு, பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
பெற்றோர் இறந்த பிள்ளைகள் கல்வி வாழ்க்கை பொறுப்பை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டதாக கூறிய அவர், 24 நேரத்தில் துரித நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுகவினர் விஷச்சாராய விவகாரம் தொடர்பாக நேத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதோடு, அது நியாயம்தான் விதிமுறையில் இடம் உள்ளது என்றும், ஜனநாயகத்தில் இருக்கக்கூடிய உரிமை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்தபோது அவர் மீது சிபிஐ விசாரணை கொண்டு வந்ததை அவர் மறந்திருக்க மாட்டார் என குறிப்பிட்ட முதலமைச்சர், சிபிஐ மீது நம்பிக்கை இருந்திருந்தால் அவர் அதை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றும், சி பி விசாரணைக்கு இடைக்கால தடை வாங்கியவர் தான் வீராதி வீரரான எதிர்க்கட்சித் தலைவர் எனவும், இது குறித்து சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்
தொடர்ந்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அதிமுகவினர் வேண்டுமென்றே அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிப்பதற்காக திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் கடந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியும் எனவும், எல் அளவில் கூட கடந்த காலத்தில் ஜனநாயகம் இருக்காது என்றும், சட்டமன்ற பேரவை 121 உள் வீதி 2இன் கீழ் கூட்டத் தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர், கூட்டத்தொடர் முழுவதும் தேவையில்லை இன்று மட்டும் நீக்கி வைத்துவிட்டு மறு வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று முன்னவர் துரைமுருகன் தீர்மானத்தை முன்மொழிய தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி,அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.