
அவதூறு வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சினிமா ஃபைனான்சியர் போத்ராவுக்கும் இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்து வந்தது.
தாம் பணம் அளிக்கவில்லை என்றாலும் தமக்கு பதில் தமது சம்பந்தி ரஜினி பணத்தைத் திருப்பிக் கொடுப்பார் எனவும் கஸ்தூரி ராஜா உத்தரவாதம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கஸ்தூரி ராஜா பணத்தைத் திருப்பித் தரவில்லை எனக் கூறி, 2016 ஆம் ஆண்டு போத்ரா வழக்கு தொடர்ந்தார்.
இதில் நடிகர் ரஜினிகாந்த் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார். அப்போது, ரஜினி தாக்கல் செய்த பதில் மனுவில், தாம் யாருக்கும் கடன் உத்தரவாதம் அளிக்கவில்லை எனவும், தம்மை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் போத்ரா இதுபோன்றதொரு வழக்கை தொடர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தாம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்படுவதாக நடிகர் ரஜினி அவதூறு பரப்புவதாக போத்ரா வழக்கு தொடர்ந்தார்.
ரஜினியிடம் தாம் ஒருபோதும் பணத்தை தருமாறு கேட்காத பட்சத்தில் அவரது கருத்து தமக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்த வழக்கை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில் போத்ராவின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கம்படியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அவதூறு கருத்து கூறிய ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமது மனுவில் போத்ரா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க உத்தரவிட்டு பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.