
நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் பெண் ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பெரும்பாலானோர் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகின்றது.
சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்கு இரையானது.
இதைதொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் தற்போது நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கடையநல்லூர் அருகே மாவடிகாலைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்திற்கு வந்தார்.
அப்போது திடீரென பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதைபார்த்த அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து போலீசார் விசாரணை செய்தபோது, அவருடைய மகள் தேவிகங்கா திருமணமான சில மாதங்களில் உயிரிழந்து விட்டதாகவும் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி பல முறை மனு அளித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.
இதைதொடர்ந்து ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.