சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தகில் ரமாணி எடுத்த அதிரடி முடிவு !!

By Selvanayagam PFirst Published Sep 6, 2019, 10:10 PM IST
Highlights

மேகாலயா மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி ராஜினாமா செய்ய  முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் வி.கே.தகில் ரமாணி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார்.  

இந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தகில் ரமாணியை, மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலய மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம்  மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் எஸ்.கே.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய குழு, கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்த முடிவை எடுத்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் இந்த இடமாற்ற முடிவை மறு பரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தகில் ரமாணி, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவுக்கு கோரிக்கை மனு அனுப்பினார். ஆனால், இந்தக் கோரிக்கையை மூத்த நீதிபதிகள் குழு அண்மையில் நிராகரித்து விட்டது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவை எதிர்த்து  பதவி விலக முடிவு செய்ய உள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றது.  நாளை ராஜினாமா கடிதத்தை முறைப்படி அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராஜினாமா முடிவு குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் தலைமை நீதிபதி தகில் ரமாணி தெரிவித்தாகவும், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான இந்திரா ஜெயசிங்கிடம் ராஜினாமா குறித்து தகில் ரமாணி பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!