தூய்மை பராமரிப்பு, மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துதல் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துதல், கட்டிடங்கள் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கிய தென்காசி அரசு மருத்துவமனைக்கு முதல் பரிசும், 2-ம் பரிசை தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு மருத்துவமனையும் பெற்றுள்ளது
சுகாதரம் மிக்க மருத்துவமனை
சுகாதாரத்தில் தமிழகத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் குக்கிராமங்களிலும் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அவரச காலத்திற்கு நீண்ட தூரம் சென்று சிகிச்சை பெறுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க குறிப்பிட்ட கிலோ மீட்டர் தூரத்திற்கு இடையே மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு சார்பாகவும் சித்த மருத்துவமும் தமிழகத்தில் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தால் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து தூய்மை மற்றும் சுகாதாரம் மிக்க மருத்துவமனைகளுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன
முதல் இரண்டு இடத்தை பிடித்த தமிழக மருத்துவமனை
அந்த வகையில் இந்தியா முழுவதும் உள்ள சிறந்த மருத்துவமனை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் வட்டார மருத்துவமனையில் தேசிய சுகாதாரத் திட்ட குழு நேரில் ஆய்வு மேற்கொண்டது. இதில் கட்டிடங்கள் பராமரிப்பு, தூய்மை பராமரிப்பு, மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துதல் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துதல், சுகாதாரக்கல்வி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் ஆய்வு மேற்கொண்டு மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த ஆய்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான சிறந்த மருத்துவமனைகளுக்கான காயகல்ப் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி முதல் பரிசை தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும், 2-ம் பரிசை தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு மருத்துவமனையும் பெற்றுள்ளது. இதனையடுத்து முதல் பரிசு பெற்ற தென்காசி அரசு மருத்துவமனைக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகையும், இரண்டாவது பரிசு பெற்ற செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ .10 லட்சம் பரிசு தொகையும் கிடைத்துள்ளது.