
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராகிறார் என்ற செய்தி வெளியானதில் இருந்து அவருக்கு எதிர்ப்பை மட்டுமே மக்கள் பரிசாக அளித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தனது ராஜினாமா, சசிகலாவின் நெருக்கடியால் தான் நிகழ்ந்தது என்று அதிரடி பேட்டியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கினார் சசிகலா.
இதனையடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும், மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் வாங்கத் தயார் எனவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இப்படி அடிக்கடி சசிகலாவுக்கு எதிராக பற்பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு மக்கள் மனதில் தனது இமேஜை உயர்த்திக் கொண்டு வருகிறார் ஒபிஎஸ்.
முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்துக்கு 5 எம்எல்ஏக்களும், முக்கிய பிரமுகர்களும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சமூக வலைத்தளங்களிலும் முதல்வருக்கு ஆதரவு பெருகுகிறது. ஒபிஎஸ்க்கு ஆதரவு அளிக்குமாறு, தொகுதி மக்கள் எம்எல்ஏக்களிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று அவர்களின் தொலைபேசி எண்களை வெளியிட்டிருந்தனர் நெட்டிசன்கள்.
இதனைத்தொடர்ந்து, ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான வளர்மதியிடம், அதே தொகுதி அதிமுக தொண்டர் ஒருவர் போன் செய்து அவரின் ஆதரவு யாருக்கு என்றுக் கேட்டார். அதற்கு வளர்மதி, உங்க தொகுதியில் தண்ணீர் வரலென்னா சொல்லுங்க. யாருக்கு ஆதரவு என்றெல்லாம் கேட்காதீங்க என்றார்.
அதற்கு அந்த தொண்டர் முதலமைச்சரை மிரட்டி ராஜினாமா பண்ண வெச்சிருக்காங்க. அவங்கள ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டார்.
அதற்கு அமைச்சர் வளர்மதி, “நீங்க ஒபிஎஸ்கா ஓட்டு போட்டீங்க” என்று கேள்வி கேட்டார்.
ஒரு கட்டத்தில் அந்த தொண்டர், ‘‘உங்க கால புடிச்சி கெஞ்சி கேட்கிறேன் எங்களுக்கு துரோகம் பண்ணிடாதீங்க’’ என்று கேட்டார்.
தற்போது இந்த ஆடியோ, வாட்ஸ்-ஆப் போன்ற சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.