மதுரை அருகே தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களை நேரடியாக வயலுக்கு அழைத்துச் சென்று விவசாயிகள் எப்படி வேலை செய்கிறார்கள் ? அவர்களது கஷ்டங்கள் என்ன ? நெற்பயிர்கள் எப்படி வளர்கிறது என்பது போன்ற பாடங்களை ஆசிரியர் சொல்லித் தருவது புதுமையாக உள்ளது.
இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயத்தை நம்பி கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களது நிலைமை தற்போது நன்றாக இல்லை. மழையின்மை அல்லது அதிக மழை, வெயில், இயற்கை சீற்றம், உரத் தட்டுப்பாடு, விளைந்த பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமை என விவசாயிகள் படும்பாடு சொல்லி மாளாது.
பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்வதை விட்டுவிட்டு நகரத்தை நோக்கி நகரத் தொடங்கி விட்டனர். இயற்கையை நம்பி விவசாயம் செய்யும் ஒரு சிலரும் கடன் தொல்லையால் தற்கொலை செய்யும் நிலைதான் தற்போது உள்ளது.
விவசாயம் தொடர்பான படிப்பும்கூட பிளஸ் 2 முடித்தபிறகுதான் படிக்க முடிகிறது. ஆனால் தற்போது தொடங்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு கூட பள்ளிகளில் நீச்சல், கராத்தே, இசை, விளையாட்டு என எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்ட்டிவிடீஸ் மட்டும்தான் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.
இல்லை என்றால் கம்ப்யூட்டர் கிளாஸ் என்ற நிலையில்தான் மாணவர்களின் படிப்பு உள்ளது. ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவ - மாணவிகளை அங்குள்ள ஆசிரியர்கள் ஒவ்வொரு வாரமும் அருகில் கிராமங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
அங்கு விவசாயிகள் எவ்வாறு பயிரிடுகிறார்கள், நாற்று நடுகிறார்கள், உரமிடுகிறார்கள், வேலை செய்கிறார்கள் என அனைத்தையும் பிராக்டிகலாக பார்வையிட வைக்கிறார்கள். மேலும் அந்தப் பள்ளி மாணவர்களை வயலில் இறங்கி நாற்றுநட வைக்கிறார்கள். விவசாயிகளும் அந்தக் குழந்தைகளுக்கு ஆர்வத்துடன் அதை சொல்லித் தருகின்றனர்.
அந்தப் பள்ளியின் ஆசிரியர்களும், மாணவர்களுக்கு விவசாயம் தொடர்பாக பல பாடங்களை நடத்தி வருகிறார்கள். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆசிரியர்கள், மாணவர்கள் பாடம் மட்டுமல்லாமல், விவசாயமும் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மகத்துவத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினர். அப்போதுதான் அவர்கள் நமது பாராம்பரியத்தை காப்பாற்றுவார்கள் என கூறினர்.
இந்த குழந்தைகளுக்கு விவசாயம் குறித்து கற்றுக் கொடுத்த விவசாயிகளும், மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எங்கே நமது தலைமுறையுடன் விவசாயம் அழிந்து போகுமோ என அஞ்சினோம். ஆனால் அந்த பிஞ்சு குழந்தைகள் விவசாயம் கற்றுக் கொள்ள வந்திருப்பது மனதிற்கு நிறைவாக உள்ளது என நெகிழ்ந்தனர்.
உசிலம்பட்டி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சி தற்போது அனைத்துத் தரப்பினரின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது.