
மாணவர்களுக்குத் என்னுடைய சொந்த செலவிலேயே அனைத்து உதவிகளையும் செய்து தருவேன். மாணவர்களின் ஒட்டுமொத்த குடும்பங்களிலும் நான் ஒரு குடும்ப உறுப்பினராக விளங்குகிறேன் என ஆசிரியர் பகவான் மாணவர்களுக்கு தனக்கும் உண்டான இந்த பாசப் பிணைப்பை விளக்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். இந்தப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பகவான் என்ற இளைஞர் 5 ஆண்டுகளுக்கு முன் பணிக்கு வந்தார். மாணவ மாணவிகளுக்கு சக தோழனாக இருந்து அவர் கல்வி கற்றுத்தர ஆங்கிலப் பாடம் அனைத்து மாணவர்களுக்கும் பிடித்தமான பாடமானது.
பாடம் எடுப்பதில் அவரது அணுகுமுறை, பழகுவதில் கண்ணியம், வழிகாட்டுவதில் எடுத்துக்கொண்ட சிரத்தை காரணமாக அனைத்து வகுப்பு மாணவ மாணவியருக்கு பிடித்தமானவராக மாறிப்போனார் பகவான். இந்நிலையில்தான் பகவானுக்கு பணியிட மாறுதல் கிடைத்தது.
இதை அறிந்த மாணவ மாணவியர்கள் கதறி அழுதனர். நீங்கள் பள்ளியை விட்டு போகக் கூடாது, நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். ஆனால் பணியிட மாற்றம் பெற்றதால் அதற்கான ஆர்டரை வாங்கப் பள்ளிக்கு வந்தார்.
இதை அறிந்த அனைத்து பள்ளி மாணவ, மாணவியரும் வகுப்புகளைப் புறக்கணித்து அவர் முன்னால் அமர்ந்து பள்ளியை விட்டுப் போகாதீர்கள் என்று அழுதனர். அவர்களுக்கு சமாதானம் கூறிய ஆசிரியர் பகவான் ஒரு கட்டத்தில் அவர்களது அன்பை எண்ணி அவரும் கண்ணீர் விட்டு அழுதார். ஆனால் மாணவ, மாணவியர் அவரை சூழ்ந்துகொண்டு கட்டிப்பிடித்தபடி எங்களை விட்டுப் போகாதீர்கள் சார் என்று கதறி அழுதனர்.
இதனால் அவர் வெளியே செல்ல முடியவில்லை. மற்ற ஆசிரியர்கள் வந்து சமாதானம் செய்தும் மாணவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் போலீஸை வரவழைத்து சமாதானப்படுத்தி பின்னர் ஆசிரியரைப் போக அனுமதித்தனர்.
மாணவர்களுக்கும் ஆசிரியருக்குமான இந்த பாசப் போராட்டம் காண்போரை கண்கலங்கச் செய்தது. ஆசிரியர் மீது மாணவர்கள் வைத்திருக்கும் இந்த பற்று நாடுமுழுவதும் பரவியது.
"மாணவர்களிடம் நான் ஆசிரியராக ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. மாணவர்களுடைய எண்ணத்துக்கு ஏற்றாற்போல் பாடம் நடத்துவேன். போரடிக்கிறது என்று சொன்னால் அவர்களுக்குக் கதை சொல்வேன். யாரையும் நான் கண்டிக்க மாட்டேன். யாரையும் அடிக்கவும் மாட்டேன். மாணவர்களுடைய பிறந்தநாள் அல்லது உடல் நலம் சரியில்லாதபோது மாணவர்களுக்குத் என்னுடைய சொந்த செலவிலேயே அனைத்து உதவிகளையும் செய்து தருவேன். அது தவிர மாணவர்களுக்கு எது தேவையாக இருந்தாலும் என்னிடம் கேட்பார்கள். நான் அவர்களுக்கு அதை வாங்கித் தருவேன்.
மாணவர்கள் அவர்களது வீட்டில் எனக்காகவே சமைத்து சாப்பாடு கொண்டு வருவார்கள். அது தவிர மாணவர்களின் வீட்டில் என்ன செய்தாலும் எனக்காகப் பெற்றோர்கள் கொடுத்து அனுப்புவார்கள். அந்தக் கிராமத்தில் உள்ள மாணவர்களின் ஒட்டுமொத்த குடும்பங்களிலும் நான் ஒரு குடும்ப உறுப்பினராக விளங்குகிறேன். ஒவ்வொரு குடும்பத்துக்கும் நான் ஒரு பிள்ளையாகவே இருக்கிறேன்.
நான் பள்ளியில் சேர்ந்த 2016-ம் ஆண்டு பவித்ரா என்ற மாணவி ஆங்கிலப் பாடத்தில் 94 மதிப்பெண் உட்பட மொத்தம் 482 மார்க் பெற்றார். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருதியே தான் பாடம் நடத்துகிறேன். தினமும் பிரார்த்தனைக் கூட்டத்தில் மாணவர்களுக்கு நீதிக் கதைகளையும் உண்மைச் சம்பவங்களையும் எடுத்துச் சொல்வேன், மாணவர்கள் தீய வழிக்குப் போகாத வகையில் அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். இதனாலேயே மாணவர்களுக்கு என்மீது பாசமும் பற்றும் அதிகமாகின. அதனால்தான் எனக்கும் மாணவர்களை நிறைய பிடிக்கும். அவர்களும் என்னை ஓர் ஆசிரியராகப் பார்க்காமல் அண்ணன் தம்பியைப் போலவே பார்ப்பார்கள் என கூறினார்.