TASMAC Shop: மதுரையில் காவலர் முத்துக்குமார் குடிபோதையில் கொலை செய்யப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்.
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடவும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காவலர் முத்துக்குமார் கொடூரமாக அடித்துக் கொலை
மதுரை மாவட்டம் முத்தையன்பட்டி என்ற இடத்தில் அரசு மதுக்கடையில் மது அருந்தும் போது, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் உசிலம்பட்டி காவல் நிலைய காவலர் முத்துக்குமார் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். குடிபோதையில் நிகழ்ந்த இந்த குற்றம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. முத்தையன்பட்டி அரசு மதுக்கடையில் காவலர் முத்துக்குமார் மது அருந்திக் கொண்டிருக்கும் போது, அருகில் மது குடித்துக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலருடன் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அங்கேயே மோதல் முடிந்தாலும் கூட, போதையில் இருந்த எதிர்கும்பல் முத்துக்குமாரை பின்தொடர்ந்து சென்று அரிவாளால் வெட்டியும், கல்லால் அடித்தும் படுகொலை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நமது எதிரி இவர்கள் தான்! திமுகவுக்கு வேலை பார்க்கும் அண்ணாமலை! இறங்கி அடித்த ஆதவ் அர்ஜூனா!
காவலரின் குடும்பம் நடுத்தெருவில்
முத்துக்குமாரை கொலை செய்த கும்பல் கஞ்சா வணிகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், கஞ்சா வணிகத்தைக் கைவிட்டு திருந்தும்படி முத்துக்குமார் அறிவுரை வழங்கியதால் தான் அந்த கும்பல் ஆத்திரமடைந்து மது போதையில் படுகொலை செய்திருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மது, கஞ்சா ஆகிய இரண்டும் சமூகத்தை எந்த அளவுக்கு சீரழிக்கின்றன என்பதற்கு முத்துக்குமார் படுகொலை தான் சான்று. மது மனிதனை மிருகமாக்கும் என்றும், மக்களைக் காக்க மதுவை ஒழிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதை அரசு பொருட்படுத்தாதன் விளைவு தான் ஒரு காவலரின் உயிர் பறிபோயிருக்கிறது. எந்தக் குற்றமும் செய்யாத அந்த காவலரின் குடும்பம் ஆதரவின்றி நடுத்தெருவுக்கு வந்திருக்கிறது. இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
மதுக்கடைகளை மூட வேண்டும்
தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பான்மையான குற்றங்களுக்கும், கொலைகளுக்கும் , சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும் மது தான் காரணம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மது அருந்துவதால் தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. மக்கள் நலனா, மது வணிகமா? என்ற வினா எழுந்தால் மக்கள் நலனுக்குத் தான் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்; மதுக்கடைகளை மூட வேண்டும். ஆனால், அதை செய்ய தமிழக அரசுக்கு மனம் இல்லை.
இதையும் படிங்க: ஒரே போஸ்டர்! நான் முதலமைச்சரா பதறிய புஸ்ஸி ஆனந்த்! அலறிய மாவட்டச் செயலாளர்! நடந்தது என்ன?
சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை
மக்கள் நிம்மதியாக வாழ்வதை உறுதி செய்வதும், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதும் தான் மாநில அரசின் அடிப்படைக் கடமையாகும். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு பெரும் தடையாக இருப்பது மதுக்கடைகள் தான். எனவே, தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடவும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.