
நாகப்பட்டினம் அருகே ஆம்னி பேருந்தில் சாராயம் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில் ஆயிரக்கணக்கான டாஸ்மாக் சரக்கு பாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள் சிக்கின.
பாண்டிச்சேரியில் இருந்து நாகப்பட்டினம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டைவிட பாண்டிச்சேரியில் விஸ்கி, பிராந்தி, ரம் போன்றவைகள் விலை மிகவும் குறைவாக கிடைக்கிறது.
இதனால், குடிமகன்கள் பாண்டிச்சேரிக்கு சென்று சரக்கு அடித்து விட்டு கையிலும், நான்கு ஃபுல் பாட்டில்களை எடுத்து வருவது வழக்கம். எல்லையில் போலீசார் அவர்களை மடக்கி பாட்டில்களை பிடுங்கி உடைத்து விட்டு எச்சரித்து அனுப்பி விடுவர். இது சாதாரணமாக நடக்கின்ற நிகழ்வு.
ஆனால், பண்டிகை நேரங்களில் பெருமளவில் பாண்டிச்சேரியில் இருந்து விஸ்கி, பிராந்தி, ரம் பாட்டில்கள் கடத்தப்படுவது வாடிக்கை. தனியார் வாகனங்களில் சரக்கு லாரிகளில் இதுபோன்று சரக்கு பாட்டில்கள் கடத்தப்படுவது வாடிக்கை.
இந்த நிலையில், இன்று நாகப்பட்டினம் போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதில், பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி நோக்கி வரும் பர்வீன் டிராவல்ஸ் ஆம்னி பேருந்தில் ஆயிரக்கணக்கான சரக்கு பாட்டில்கள் கடத்தப்படுவதாக தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் நாகப்பட்டினம் பிரதான சாலையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது சென்னை நோக்கி வந்த பர்வீன் டிராவல்ஸ் பேருந்தை மடக்கி நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் ஆயிரக்கணக்கான விஸ்கி, பிராந்தி, ரம் பாட்டில்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பெரிய பெரிய பாலிதீன் கவரில் அடைக்கப்பட்ட சாராய பாக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து போலீசார், பயணிகளை இறக்கிவிட்டு, பேருந்தை பறிமுதல் செய்தனர். ஓட்டுநரையும் கைது செய்தனர்.
சாராயத்தை கடத்தி வந்தவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பர்வீன் டிராவல்ஸ் பிரபலமான நிறுவனமாகும். பல அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் பர்வீன் டிராவல்ஸ் வாகனங்களே இயக்கப்படும். இந்நிலையில் சாராயம் கடத்தி வாகனம் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.