அப்படித்தான்.. அதிக விலைக்கு சரக்கு விற்பேன்..! டாஸ்மாக் ஊழியருக்கு ‘ஆப்பு’ அடித்த அரசாங்கம்…

By manimegalai aFirst Published Sep 28, 2021, 6:39 PM IST
Highlights

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என்று தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. சேல்ஸ் செய்யப்படும் மதுபானத்துக்கு ரசீது தர வேண்டும் என்றும், இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அதிரடியாக ஆணையிட்டது.

குடிமகன்களுக்கு இந்த உத்தரவு பெரும் கொண்டாட்டமாக இருந்தாலும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டு கொண்டு தான் இருந்தன. இப்போது அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. அதிக விலைக்கு மதுபானம் விற்ற டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்த முழு விவரம் வருமாறு: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே திருவரங்கம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று இருக்கிறது. இந்த கடையில் ஊழியர்களாக இருப்பவர்கள் சோலைராஜ், ராமகிருஷ்ணன். மதுபானக்கடை ஊழியர்களான இருவரும் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றிருக்கின்றனர்.

இதை தாங்க முடியாத குடிமகன் ஒருவர், செல்போனுடன் சென்று அரசு சொன்ன விலைக்கு மது தருமாறு கூறி காசை நீட்டி இருக்கிறார். அவரிடம் கூடுதலாக விலை வைத்து, அந்த ரூபாயை தருமாறு சோலைராஜ் கட்டாயப்படுத்தி இருக்கிறார். அரசு சொன்ன உத்தரவை சுட்டிக்காட்டி கூடுதல் பணம் தரமுடியாது என்று வாடிக்கையாளர் கூற அவரை அவமரியாதையாக பேசி உள்ளார்.

அத்தோடு விட்டால் பரவாயில்லை… அரசு அப்படித்தான் சொல்லும்… அரசாங்கம் சொல்வதை கேட்க முடியாது என்று கூற… அதை ஏற்காத வாடிக்கையாளர் கொடுத்த காசை திரும்ப பெற்றுவிட்டு சென்றார். டாஸ்மாக் ஊழியர் கூடுதல் விலைக்கு மதுவிற்பேன் என்று அடம்பிடிப்பதும், அதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று வாடிக்கையாளர் பேசும் காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ இணையத்தில் வெளியானது.

அவ்வளவு தான்… ஊர் முழுக்க இந்த வீடியோ வைரலானது. இதையடுத்து, வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல… துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட தோட்டா போல உடனடி நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. கூடுதல் விலைக்கு தான் விற்பேன் என்று அடம்பண்ணி, அடாவடியாக பேசிய டாஸ்மாக் ஊழியர் சோலைராஜூவும், மற்றொரு ஊழியரான ராமகிருஷ்ணனையும் சஸ்பெண்ட் செய்து ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளது.

அரசு நிர்வாகத்தின் இந்த அதிரடி ஆப்பு நடவடிக்கை, டாஸ்மாக் ஊழியர்களை கதி கலங்க வைத்து உள்ளது. இதன் பிறகாவது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்கள் சரியான விலையில் விற்கப்பட வேண்டும் என்பது தான் குடிபிரியர்களின் ஆதர்ஷ விருப்பமாக இருக்கிறது…!

click me!