தமிழக வனத்துறையின் முதல் மோப்பநாய் சிமி அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

By SG BalanFirst Published Mar 27, 2023, 11:18 PM IST
Highlights

தமிழக வனத்துறைக்காக வாங்கப்பட்ட முதல் மோப்பநாய் சிமி 8 ஆண்டுகள் சேவையாற்றிய பின் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது.

தமிழ்நாடு வனத்துறையின் முதல் மோப்பநாய் சிமி வயது முதிர்வால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. அதன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு வனத்துறைக்காக முதல் முதலில் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த ‘சிமி’ என்ற பெண் மோப்பநாய் வாங்கப்பட்டது. இந்த நாய் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனத்துறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 2014ஆம் ஆண்டு பிறந்த சிமி ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு வனத்துறையில் இணைந்தது.

சிமி சுமார் 30 வழக்குகளில் முக்கியமான பங்காற்றியுள்ளது. 2018ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தின் கம்பம் அருகே ஆறு காட்டு யானைகளை வேட்டையாடியவர்களைக் கண்டுபிடிக்க சிமி பேருதவி செய்தது. அதே ஆண்டு, சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 360 கிலோ சந்தனக் கட்டைகளை சிமி கண்டுபிடித்தது. மலைகளுக்கு அருகே வெள்ளம் ஏற்படும்போது மீட்புப் பணிகளில் உதவி செய்துள்ளது. ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் வட்டாரப் பகுதிகளில் சிமியுடன் வனத்துறை நடத்திய தொடர் ரோந்துப் பணிகளைத் தொடர்ந்து வனப்பகுதியில் சட்டவிரோதமான வேட்டையாடல் வெகுவாகக் குறைந்துள்ளது.

37 கிராம பெண் குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கிய மருத்துவர்

2018ஆம் ஆண்டு தமிழக அரசு சிமி மற்றும் மோப்பநாய் காவலர் பெரியசாமி இருவரின் சேவையையும் பாராட்டி கௌரவித்திருக்கிறது. 8 ஆண்டுகளாக வனத்துறையில் உழைத்துவந்த சிமி முதுமையால் கடந்த ஆறு மாதங்களாக எந்தப் பணியிலும் ஈடுபடுத்தப்படாமல் இருந்தது.

கடந்த மார்ச் 10ஆம் தேதி சிமியின் உடல்நிலை பலவீனமானதால் திருநெல்வேலி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அப்போதே சிமி விரைவில் வனத்துறை பணியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக வனத்துறையினர் கூறினர். இந்நிலையில் ஞாயிறு காலை சிமி உயிரிழ்ந்துவிட்டது. வனத்துறை வளாகத்தில் வைத்து சிமியின் உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதும், உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சிமி பல்வேறு சந்தர்ப்பங்களில் வேட்டை, கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரைக் அடையாளம் காண அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. நாட்டு வெடிகளைக் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளது. இவ்வாறு வனத்துறையின் தோழனாக வருடக்கணக்காக தங்களுடன் பழகிய மோப்பநாய் சிமி உயிரிந்திருப்பது ஶ்ரீவில்லிப்புத்தூர் வனத்துறை அதிகாரிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாதம் ரூ.11,000 பென்ஷன் கொடுக்கும் எல்ஐசி ஜீவன் சாந்தி திட்டம்!

click me!