சென்னையில் இன்றைய வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
கோடை காலம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். ஏப்ரல் மாதத்திலேயே இப்படி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மே மாத அக்னி நட்சத்திரம் தொடங்கினால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றார் போல நாட்டின் பல மாநிலங்களில் ஏப்ரல் முதல் ஜுன் வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்தது. குறிப்பாக திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூர் பரமத்தி, நாமக்கல், மதுரை, வேலூர், தருமபுரி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், வேட்பாளர்கள், சாமானிய மக்கள் என அனைவரும் இந்த தேர்தலில் வாக்களித்து வருகின்றனர். மதியம் 1 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் 40.05% வாக்குகள் பதிவாகி உள்ளது. கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாக்களித்து வரும் நிலையில், வெயிலின் தாக்கத்தால் சேலத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாக்குச்சாவடிகளில் வெப்பத்தை தணிக்க சாமியானா பந்தல், தண்ணீர் வசதி என பல வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், முதியோர் மதியம் 3 மணிக்கு மேல் வந்து வாக்களிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில் சென்னையில் இன்றைய வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ தென் சென்னை மற்றும் நகரின் கடலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வெப்பநிலை இப்போது 34-35 ஆக மட்டுமே உள்ளது. கடலில் இருந்து 6-7 கிமீ தூரம் வரை சென்றால் வெயிலுக்கு பயப்படாமல் வாக்களிக்கலாம். ஆனால் அதே நேரம் மேற்கு தாம்பரத்தில் 40.6, திருவேற்காடு 40.3, பூந்தமல்லியில் 40.1 பதிவாகியுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Early sea breeze in South Chennai and areas close to sea in the city and temperature is now only around 34-35. One can go and vote without fearing heat if ur upto 6-7 km from sea.
While its sizzling in West Tambaram 40.6, Thiruverkadu 40.3, Poonamalle 40.1