2015க்கு பிறகு இதுதான் அதிகபட்ச மழையாம்… தமிழ்நாடு வெதர்மேனின் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

By Narendran SFirst Published Nov 7, 2021, 11:00 AM IST
Highlights

2015 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் தற்போது பெய்து வரும் மழை தான் அதிகபட்ச மழை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னை தவிர்த்து திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோவை,திருப்பூர், ஈரோடு, கரூர், ,தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்ததது. காலை 3 மணி வரை சென்னையில் 189 மிமீ மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் பலர் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். சென்னையில் போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், ஆவடி பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் பாதுகாப்பு கருதி சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கோயம்பேடு, வடபழனி பகுதிகளில் லேசான மழையும் மழை, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை,மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. வடபழனி, நுங்கம்பாக்கம், தி நகர், போரூர், வளசரவாக்கம், அண்ணாசாலை, கோடம்பாக்கம், கோயம்பேடு, குரோம்பேட்டை என்று சென்னையின் முக்கிய பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. குறிப்பாக வியாசர்பாடி ஜீவா ரயில்வே கேட் பாலம் அடியில்,பெரம்பூர் ரயில்வே சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் அதிக அளவு தேங்கியுள்ளது. இதற்கிடையே சென்னையில் இந்த வருடம் பெய்ததிலேயே இதுதான் மிக அதிக பட்ச மழை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார். அதில், சென்னையில் இந்த வருடம் பெய்ததிலேயே இதுதான் மிக அதிக பட்ச மழை என்றும் காலை 5 மணி வரை தீவிர கனமழை பெய்துள்ளது என்றும் இப்போதைக்கு மழை நிற்பது போலவும் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்னையில் வில்லிவாக்கத்தில் 162 மிமீ மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ள அவர்,  நுங்கம்பாக்கத்தில் 145 மிமீ மழையும் புழல் பகுதியில் 111 மிமீ மழையும், பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் காலை 5 மணி வரை சென்னை மீனம்பாக்கத்தில் 4.8 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும் தரமணியில் 5.4 செ.மீ, வில்லிவாக்கத்தில் 16.15 செ.மீ, புழலில் 11.10 செ.மீ, திருச்சி துவாக்குடியில் 2.90 செ.மீ மழைப்பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் தற்போது பெய்து வரும் மழை தான் மிக அதிகபட்ச மழை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.  இதற்கிடையே சென்னையில் மழை தொடர்ந்தால் அதிக அளவில் வெள்ள நீர் தேங்கி வீடுகளுக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளதால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

click me!