பிஎச்டி ஆய்வு மாணவர்களுக்கான யுஜிசியின் புதிய விதிகளை நிராகரிக்க வேண்டும் என ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்
முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கான யுஜிசி வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து அவர் வழங்கியுள்ள கடிதத்தில், இந்த ஆணையைத் திரும்பப்பெற வேண்டுமென யுஜிசியைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு ( யுஜிசி) இப்போது வெளியிட்டிருக்கிறது. 2024 மார்ச் 13ஆம் தேதி நடைபெற்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் 578 ஆவது கூட்டத்தில் இது இறுதி செய்யப்பட்டுள்ளது. 2024 - 25 ஆம் கல்வி ஆண்டு முதல் இந்த விதிகள் நடைமுறைக்கு வருமென்றும், முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படுமென்றும், அந்தத் தேர்வு ஜூன், டிசம்பர் மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தேசிய தேர்வு முகமையால் (National Testing Agency - NTA ) நடத்தப்படும் என்றும் யுஜிசி அறிவித்துள்ளது.
இந்த முடிவு தேசிய கல்விக் கொள்கையின் அங்கமாக இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நெறிமுறைகள் மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பவையாகவும், பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி உரிமையில் தலையிடுபவையாகவும் இருப்பதோடு ஆராய்ச்சிக் கல்வியின் தரத்தையும் கெடுப்பவையாக உள்ளன. எனவே யுஜிசியின் இந்த ஆணையைத் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது எனவும், இந்த ஆணையைத் திரும்பப்பெற வேண்டுமென யுஜிசியைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் கட்டுப்பாடு - சென்னை காவல்துறை விளக்கம்!
முனைவர் பட்ட ஆய்வுகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக 5 ஆண்டுகளுக்கு முன் யுஜிசி ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தனது அறிக்கையை யுஜிசியிடம் சமர்ப்பித்தது. இரண்டு பாகங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் முனைவர் பட்ட ஆய்வுகளின் தரம் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் எவை என்பதைப் பற்றியும், அவற்றை உயர்த்துவதற்கான வழிமுறைகள் எவை என்பதைப் பற்றியும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது . அந்தப் பரிந்துரைகளை செயல்படுத்தக் கடந்த 5 ஆண்டுகளாக யுஜிசி ஆர்வம் காட்டவில்லை. அதற்கு மாறாக ஆராய்ச்சித் திறனை மேலும் பலவீனப்படுத்தும் நடவடிக்கையை இப்போது யுஜிசி எடுத்திருக்கிறது.
இப்போது யுஜிசி அறிமுகப்படுத்தி இருக்கும் தேசிய தகுதித் தேர்வு முறை அதற்கான தனியார் பயிற்சி மையங்கள் பெருகுவதற்கும், அவற்றை நடத்துகிறவர்கள் பணம் சம்பாதிப்பதற்கும் மட்டுமே வழிவகுக்கும். நீட் தேர்வு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. தேசிய தகுதித் தேர்வு முறை மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரத்தில் தலையிட்டு அவை சுதந்திரமாக செயல்படுவதைத் தடுப்பதாக உள்ளது. அதுமட்டுமின்றி அது ஆராய்ச்சிக் கல்வியை முழுமையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு போவதற்கான ஏற்பாடும் ஆகும்.
2024 ஜனவரியில் வெளியான 2021-22 க்கான உயர்கல்விக்கான அகில இந்திய அறிக்கை ( AISHE ) இந்தியா முழுவதும் 2021-22 ஆம் கல்வியாண்டில் 2,12,568 பேர் பிஎச்டி ஆய்வு மாணவர்களாக சேர்ந்துள்ளனர் எனத் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் அந்த ஆண்டில் 28,867 மாணவர்கள் பிஎச்டி ஆய்வுக்கென சேர்ந்துள்ளனர் என அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது, ஒட்டுமொத்த பிஎச்டி ஆய்வு மாணவர்களில் 13.58% பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். மையப்படுத்தப்பட்ட தகுதித் தேர்வு நடத்தப்படும் என்ற யுஜிசியின் புதிய விதிமுறைகள் தமிழ்நாட்டின் ஓபிசி,எஸ்சி,எஸ்டி சமூகங்களைச் சேர்ந்த ஆய்வு மாணவர்களுடைய எண்ணிக்கையைக் குறைத்துவிடும் ஆபத்து உள்ளது.
முனைவர் பட்ட ஆய்வுகளின் தரத்தைக் குறைப்பதாகவும், பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை ஒழிப்பதாகவும், மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதாகவும் உள்ள யுஜிசியின் இந்தப் புதிய விதிமுறைகளைத் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது. அவற்றை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமெனப் பல்கலைக்கழக மானியக் குழுவை ( யுஜிசி) வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.