
ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கினால் அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் போக்குவரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், போக்குவரத்துறை சார்பாக ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சிலர் தங்களது பணியின் போது மது அருந்திய நிலையில் பணிபுரிவதாகப் புகார் பெறப்படுகிறது.
இதையும் படிங்க;- ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயற்சி... கால்தவறி தண்டவாளத்தில் விழுந்த திருடன்... அடுத்து நிகழ்ந்தது என்ன?
மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும். இது போன்ற சம்பவங்கள் பயணிகளிடையே நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதுடன் பயணிகளுக்கு நமது கழகத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. இதனால் அவர்கள் தொடர்ந்து நமது கழகப் பேருந்துகளில் பயணிப்பதைத் தவிர்க்க வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியின் போது மது அருந்திய நிலையில் பணி புரியக்கூடாது.
அவ்வாறு பணியின் போது மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு மிக அதிக அளவில் உள்ளது. நமது கழகத்தில் மது அருந்திய நிலையில் பணியில் கண்டறியப்பட்டால் மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை (அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம்) எடுக்கப்படும். எனவே, பணியாளர்கள் மேற்படி குற்றத்திற்கான பின் விளைவுகளை அறிந்து பணியில் ஒழுங்கீனத்திற்கு இடம் கொடுக்காமல் பணிபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க;- குன்றத்தூரில் தந்தை, மகன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை