உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை விரைவில் மீட்க வேண்டும்... ஜெய்சங்கரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

Published : Feb 28, 2022, 04:13 PM IST
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை விரைவில் மீட்க வேண்டும்... ஜெய்சங்கரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

சுருக்கம்

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை விரைவில் மீட்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை விரைவில் மீட்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 5வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. போரால் உக்ரைன் நாட்டு மக்கள் 150க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய படைகளின் ஆக்ரோஷ தாக்குதல்களால், உக்ரைன் நாட்டு மக்கள் ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதனால் உக்ரைன் எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் கடும் குளிரிலும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயணிகளை அண்டை நாடுகளின் வழியாக வெளிநாட்டு தூதரகங்கள் மீட்டு வருகின்றனர்.

அந்த வகையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, உக்ரைனின் அண்டை நாடுகளில் விமானங்கள் மூலம் இந்திய மாணவர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றன. இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அத்துடன் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை  மத்திய ,மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் , உக்ரைனில் உள்ள மாணவர்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் குறித்த விவரங்களை தெரிவித்து அவர்களுக்கு தேவையான உணவு ,இருப்பிட வசதி, பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்வதோடு விரைவில் அவர்களை மீட்டு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இதற்கென தனி அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது எனவும் ,விரைவில் அவர்கள் மீட்டு கொண்டு வரப்படுவார்கள் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழக முதல்வருக்கு உறுதியளித்துள்ளார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!