கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த 5 பயிற்சி மருத்துவர்கள் கடல் அலையில் சிக்சி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு பயிற்சி மருத்துவராக பணியில் சேரவிருந்த மாணவர்கள் சிலர் விழா ஒன்றில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்திருந்தனர். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அருகில் இருந்த லெமூர் கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டனர். கடந்த சில தினங்களாக கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கடல் அலையின் சீற்றம் சற்று அதிகமாக இருக்கும் என்று கூறி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கைக்கு ஏற்றாற்போல் கடலும் சீற்றமாகவே காணப்பட்டது. இந்நிலையில், தஞ்சையைச் சேர்ந்த சாருகவி (வயது 24), நெய்வேலியைச் சேர்ந்த காயத்ரி (25), ஆந்திராவைச் சேர்ந்த வெங்கடேஷ் (24), திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரவீன் (23), குமரியைச் சேர்ந்த சர்வதர்ஷித் (23) ஆகிய 5 பயிற்சி மருத்துவர்களும் கடற்கரை அலையில் கால்களை நனைத்தவாறு விளையாடிக் கொண்டிருந்தனர்.
undefined
விளையாட்டின் போது உணர்ச்சி மிகுதியால் தங்களை அறியாமல் பயிற்சி மருத்துவர்கள் சற்று கடலில் உள்ளே சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது வந்த ராட்சத அலையில் சிக்கிய 5 பேரும் கடலுக்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். மேலும் இவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மேலும் 3 பேர் சற்று முன்பாகவே விளையாடிக் கொண்டிருந்ததால் அப்பகுதியில் அமர்ந்திருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டனர். ஆனால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 5 பேரையும் அவர்களால் மீட்க முடியவில்லை.
உடனடியாக இது தொடர்பாக ஆம்புலன்ஸ், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தகவல் தெரிவித்த 45 நிமிடங்கள் கழித்தே தீயணைப்பு வீரர்கள் விபத்து நடைபெற்ற பகுதிக்கு வந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அவர்கள் சற்று முன்னதாக வந்திருந்தால் மேலும் சிலரை காப்பற்றி இருக்கலாம். அவர்கள் தாமதமாக வந்ததால் தான் உயிரிழப்பு 5ஆக உயர்ந்துள்ளதென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளை எச்சரிப்பதற்கு காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் இல்லை என்று ஆவேசம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், 5 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மருத்துவக் கல்வி பயின்று உயிர் காக்கும் மருத்துவராகி மருத்துவச் சேவையில் ஈடுபடவிருந்த இம்மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் பேரிழப்பாகும்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறித்தியதோடு காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதி செய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன். இந்தத் துயரமான சம்பவத்தில் தம் பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், அவர்களுது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.