CM Stalin in Kehlo India : சென்னையில் இன்று நடைபெற்ற கேலோ இந்திய துவக்க விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடி அவர்கள் இன்று மாலை சென்னை வந்தடைந்தார்.
இந்திய அளவில் 13வது முறையாக நடத்தப்படும் இந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், இந்த முறை தமிழகத்தில் நடத்தப்பட உள்ளது. அதற்கான துவக்க விழா இன்று ஜனவரி 19ம் தேதி மாலை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பாரத பிரதமர் மோடி அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வருகின்ற 2036 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முயற்சி செய்து வருவதாக கூறினார்.
விளையாட்டுத்துறையில் முக்கிய மாநிலமாக உயர்ந்திருக்கும் தமிழ்நாடு: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
மேலும் அவர் தமிழ்நாட்டில் பல சிறந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர் என்றும், விசுவநாதன் ஆனந்த், பிரக்யானந்தா போன்ற பலரை சுட்டிக்காட்டியும் தமிழ்நாட்டிற்கு புகழாரம் சூட்டினார். மேலும் விளையாட்டு உபகரண தயாரிப்பில் இந்தியா தற்சார்பு நாடாக மாற வேண்டும் என்பதை தன்னுடைய இலக்கு என்றும் கூறினார்.
அதே போல இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக நிலை நிறுத்துவது தான் தங்களுடைய குறிக்கோள் என்று கூறினார். மணிப்பூரில் உள்ள பிரச்சனையால் அங்குள்ள விளையாட்டு வீரர்களை சகோதர உணர்வோடு அழைத்து தமிழகத்தில் பயிற்சி கொடுத்துள்ளோம் என்றார் அவர்.
அவர்களின் சிலர் இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளது தனது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் துவங்கிய இந்த விளையாட்டு விழா, வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்க உள்ளது.
சுமார் 5500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இங்கே நடக்க உள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். தலைநகர் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரிய விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் - பிரதமர் மோடி!