விளையாட்டுத்துறையில் முக்கிய மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்திருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் ஜனவரி 19ஆம் தேதி (இன்று) முதல் வருகிற 31ஆம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தந்து கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்துச் சிறப்பிக்குமாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 4ஆம் தேதி டெல்லிக்கு சென்று அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற தொடக்க விழாவில், கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது, தேசிய இளையோர் விளையாட்டு தொடருக்கான சின்னத்தை பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசாக அளித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் வரவேற்று பேசினார்.
undefined
அப்போது பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிகவும் குறைவான நேரத்தில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்திக்காட்டியது. அதனை அடுத்து ஆசிய ஹாக்கி கோப்பை, ஸ்குவாஷ் உலக கோப்பை உள்ளிட்ட பல தொடர்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்.” என்றார்.
2021 ஆண்டில் இருந்து மாநில இந்திய மற்றும் உலக அளவிலான போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி வருவதாக தெரிவித்த அவர், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு விளையாட்டு கிட்-களை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
பொதுவாக விளையாட்டு போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வர். ஆனால், முதலமைச்சர் கோப்பை போட்டியில் சாதாரண மக்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
“இந்தியாவில் கல்வி, சுகாதாரம் என்றால் தமிழ்நாட்டைத் தான் முதன்மை மாநிலமாக சொல்வர். அதேபோல், இன்றைக்கு விளையாட்டுத்துறை என்றாலும் தமிழ்நாடு மிக முக்கிய மாநிலமாக உயர்ந்திருக்கிறது.” எனவும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னின்று செய்துள்ளார்.
குடியரசு தினம் 2024: டெல்லி விமான நிலையத்தில் தினமும் 2 மணி நேரம் சேவை நிறுத்தம்!
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் நம் நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் மத்திய நிர்வாகப் பகுதிகளிலிருந்து 18 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் 5,500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். போட்டிகள் சிறந்த முறையில், நடைபெறுவதற்கான கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு வீரர்கள் வந்து தங்குதற்கான இடவசதிகள், உணவு வசதிகள், போட்டி நடைபெறும் இடங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் தமிழக அரசு செய்துள்ளது.
தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி. வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. மேலும், முதல்முறையாக தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உட்பட மொத்தம் 27 விளையாட்டுகள் காட்சி விளையாட்டுகளாக (DEMO Sports) கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் இடம் பெறவுள்ளன.