பல்லடம் அருகே பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த 6 வயது சிறுவன் அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கணபதிபாளையம், பெத்தாம்பாளையம், ஏழுமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் சாய்சரண் (வயது 6) பொங்கலூரில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தான். பொங்கல் விடுமுறை முடிந்து வழக்கம் போல் இன்று காலை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் வழக்கம் போல் பள்ளி முடிந்து சிறுவன் சாய்சரண் தனியார் பள்ளி பேருந்தின் மூலம் வீடு திரும்பியுள்ளான்.
திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு சட்டக்கல்லூரி மாணவன் பலி; சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை
undefined
அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் அதே பேருந்தின் முன் பக்க சக்கரத்தில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இதனை கவனிக்காத பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று சிறுவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்ததில் சிறுவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விபத்து தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகன ஓட்டுநரை வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.