Tamilnadu flood: ஒரே மாவட்டத்தை பொளந்துகட்டிய மழை.. வெள்ளத்தால் தத்தளிக்கும் குமரி.. மழை எப்போது நிற்கும்.?

By Asianet TamilFirst Published Nov 14, 2021, 10:05 AM IST
Highlights

கன்னியாகுமரி மாவட்டத்தில் 200 கிராமங்களில் வெள்ளம் புகுந்து  துண்டிக்கப்பட்டுள்ளன. இதுபோல கடும் மழையால 47 குளங்களின் கரைகள் உடைந்து வீடுகள், விளை நிலங்களுக்குள் புகுந்துவிட்டன. மழை காரணமாக, மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன.
 

கன்னியாகுமரியைப் புரட்டிப் போட்ட மழையால், மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை அக்டோபர் 26 அன்று தொடங்கியது. தொடங்கியது முதலே வட தமிழகத்தில் சென்னையையும் பதம் பார்த்து வந்த மழை, டெல்டா மாவட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் சேதங்களையும் பாதிப்புகளையும் பருவ மழை ஏற்படுத்தியிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கன மழை இடைவிடாலம் பெய்து வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 200 கிராமங்களில் வெள்ளம் புகுந்து  துண்டிக்கப்பட்டுள்ளன. இதுபோல கடும் மழையால 47 குளங்களின் கரைகள் உடைந்து வீடுகள், விளை நிலங்களுக்குள் புகுந்துவிட்டன. மழை காரணமாக, மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன.

தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இறச்சக்குளம், பூதப்பாண்டி, நங்காண்டி, தெரிசனங்கோப்பு,  திருப்பதிசாரம், வீரநாராயணமங்கலம், சுசீந்திரம், தேரூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறிக் கிடக்கின்றன. இங்கு தண்ணீர் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல இப்பகுதிகளில் சாலைகள், வயல்வெளிகள், தென்னந்தோப்புகள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மூழ்கிக்கிடப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றன.
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திற்பரப்பு அருவியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டிக்கொண்டிருக்கிறது.

குலசேகரத்தில் உள்ள நந்தியாற்றில் வெள்ளம் காரணமாக, அப்பகுதிகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.  கோதையாறு மற்றும் பரளியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடும் பாதிப்பையும் சேதங்களையும் சந்தித்துள்ளன. குறிப்பாக ரப்பர் தோட்டங்களில் தண்ணீர் புகுந்ததால் ரப்பர் தோட்டங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தேன் பெட்டிகள் தண்ணீர் மூழ்கி சேதமடைந்தன. பாம்பூரி வாய்க்காலில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், பாலப்பள்ளம் சகாயநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழைகள் வெள்ளத்தில் மூழ்கின.

நேற்று இரவு வரை  சுமார் 47 குளங்கள் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தோவாளையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வாகன போக்குவரத்து மாற்று பாதைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. ரயில் தண்டாவாளங்களில் 3 கி.மீ. தூரம் வரை தண்ணீர் தேங்கியிருப்பதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த அளவுக்கு கடுமையாக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே திங்கள்கிழமை முதல் கன்னியாகுமரியில் மழை படிப்படியாகக் குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 
 

click me!