அதிமுக கூட்டணி முறிவு: தமிழக பாஜக தலைமைக் குழு ஆலோசனை!

By Manikanda Prabu  |  First Published Sep 28, 2023, 3:55 PM IST

அதிமுகவுடனான கூட்டணி முறிவு குறித்து தமிழக பாஜக தலைமைக் குழு விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


தமிழ்நாட்டில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுள்ளது. அண்மைக்காலமாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை போர் முற்றி வந்த நிலையில், அதிமுக அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

“உண்மைக்கு மாறான விமர்சனங்களை அண்ணாமலை வைத்ததாலேயே கூட்டணி முறிந்துள்ளது. பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அல்ல; பாஜக கூட்டணியில் நேரம் வரும்போது அதிமுக சேர்ந்துவிடும் என்பது கவனத்தை திசைதிருப்பும் செயல்.” என கேபி முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டதால் ஆரம்பத்தில் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்த பாஜக இந்த விவகாரம் குறித்தும், அரசியல் முன்னேற்றங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கவுள்ளது. கட்சியின் மையக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் இந்த பிரச்சினை விரைவில் விவாதிக்கப்படும் என பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்து செல்வதாக அதிமுக அறிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய தமிழக பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர் பொங்குலெடி சுதாகர் ரெட்டி, இதுகுறித்து விரைவில் கட்சியின் மாநிலக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.

“கூட்டணி குறித்து என்னால் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்க முடியாது. பாஜக மத்திய தலைமை தமிழகத்தில் அரங்கேறும் காட்சிகளை கவனித்து வருகிறது. இதுகுறித்து அவர்கள் முடிவெடுப்பார்கள்.” எனவும் அவர் கூறியுள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்து சென்றது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், கட்சியின் டெல்லி தலைமை அறிக்கை கேட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் குறித்து கேட்டபோது, பொங்குலெடி சுதாகர் ரெட்டி எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் நழுவி விட்டார்.

பாஜக உறவை முடித்துக் கொண்ட அதிமுக: தமிழ்நாட்டில் கூட்டணி கணக்கு என்னவாக இருக்கும்?

அதிமுகவுடன் ஏற்கனவே தொடர்பில் உள்ள மூத்த தலைவர்களிடம் மட்டுமே இது தொடர்பான அறிக்கை கேட்கப்படும்; கூட்டணி குறித்த முடிவை உயர்நிலைக் குழுதான் அறிவிக்கும் என பாஜகவின் மற்றொரு மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

“செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை பதினைந்து நாட்கள் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்கு பிறகு, அந்தந்த கமிட்டிகளின் கூட்டம் கூட்டப்படும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஜகவுடனான தனது உறவை முறித்துக் கொண்ட அதிமுக, 2024 மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் தலைமையில் தனிக் கூட்டணி அமைக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், பாஜகவின் டெல்லி தலைமை எந்தமாதிரியான முடிவை எடுக்கப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

click me!