
மதுரை திருப்பரங்குன்றத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரருடன் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற பாதுகாப்புக்காக சென்ற மத்திய சிஆர்பிஎஃப் படையினரை தமிழக காவல்துறையினர் தடுத்து நிறுத்தி மேலே செல்ல அனுமதி அளிக்கவில்லை. கார்த்திகை தீபத் திருநாளான இன்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றி வழிபடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்திருந்தது.
ஆனால் இன்று திருப்பரங்குன்றத்தில் எப்போதும் போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மனுதாரர் சென்ற நிலையில், சிஆர்பிஎஃப் படையினரின் பாதுகாப்புடன் மனுதாரர் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடியாக உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை எனக்கூறி இந்து முன்னணி அமைப்பினர் அங்கு திரண்டு வந்து போராட்டம் நடத்தினார்கள். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்திய போதிலும் இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு மலை மேலே சென்றனர். இதனால் காவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டத்தில் 2 காவலர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
சிஆர்பிஎஃப் படையினரை தடுத்த தமிழக காவல்துறை
இதற்கிடையே நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர் சிஆர்பிஎஃப் படையினருடன் மலையில் உள்ள தீபத்தூணுக்கு செல்ல முயன்றனர். அப்போது தமிழக காவல்துறையினர் சிஆர்பிஎஃப் படையினரை மலை மேலே செல்ல அனுமதிக்காமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவிட்டும் எங்களை மலை மேல் அனுமதிக்க மறுப்பது ஏன் என இந்து முன்னணி அமைப்புகள் தமிழக காவலதுறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் தடுப்புகளை மீறி மலை மீது ஏறிய நிலையில் காவலர்களை அவர்களை கீழே இறக்கினார்கள்.
தமிழக அரசு மேல்முறையீடு
திருப்பரங்குன்றத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் கூட்டம் கூடுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை முதல் வழக்காக நாளை எடுத்துக் கொள்வதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.