
திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உடனடியாக அமலுக்கு வருவதாக மதுரை மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனால், அப்பகுதியில் மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தும், அது இதுவரை ஏற்றப்படாததைக் கண்டித்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறி முழக்கமிட்ட அவர்கள், தடையை மீறி மலைப்பகுதிக்குச் செல்ல முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், அனுமதி வழங்கப்பட்டு பல நாட்களாகியும் தீபம் ஏற்றும் நிகழ்வு தொடங்கப்படாமல் தாமதமாகி வருவதாகக் கூறி இந்து அமைப்புகளும், பாஜகவினரும் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த தாமதத்தைக் கண்டித்து இன்று (புதன்கிழமை) திருப்பரங்குன்றம் பகுதியில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபத்தூணில் உடனடியாகத் தீபம் ஏற்ற அனுமதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்குப் போடப்பட்டிருந்த காவல் தடுப்புகளை உடைத்துக்கொண்டு மலைப் பகுதிக்குச் செல்ல முயன்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு காவலர் காயம் அடைந்துள்ளார். தீபம் ஏற்றுவதற்காக மலைப் பாதை நோக்கி ஓடிச் சென்ற பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாகத் திருப்பரங்குன்றம் மலை முழுவதும் தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நிலைமையைக் கருத்தில் கொண்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் உடனடியாகத் திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன் மூலம், அப்பகுதியில் மக்கள் கூடுவதற்கும், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.