
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செல்லப் பிராணிகளுக்கான (நாய்கள் மற்றும் பூனைகள்) உரிமம் பெறுவதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, உரிமம் பெறுவதற்கான இறுதித் தேதி டிசம்பர் 14, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செல்லப் பிராணிகளின் ஒருங்கிணைந்த மேலாண்மைக்காக, மேம்படுத்தப்பட்ட இணையதள சேவையை மேயர் பிரியா அவர்கள் கடந்த 3.10.2025 அன்று தொடங்கி வைத்தார். இந்தச் சேவையின் மூலம், செல்லப் பிராணிகள் மற்றும் தெருநாய்களின் தடுப்பூசி விவரங்கள் மற்றும் அடுத்த தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய தேதிகளை மாநகராட்சி திறம்பட கண்காணிக்க முடியும்.
செல்லப் பிராணிகள் கைவிடப்படுவதைத் தடுப்பதற்காகவும் ஆண்டுதோறும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்யவும், மாநகராட்சிப் பகுதிகளில் செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோசிப் செலுத்தி உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த உரிமம், தடுப்பூசி செலுத்தப்பட்ட நாள் முதல் ஓராண்டு காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பிறகு புதுப்பிப்பது கட்டாயம். மைக்ரோசிப் எண்ணுடன், செல்லப்பிராணிகளின் உரிமையாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தரவுகள் பதிவு செய்யப்படுகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் இதுவரை 91,711 செல்லப்பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 45,916 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கான காலக்கெடு முதலில் நவம்பர் 23, 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் டிசம்பர் 7, 2025 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது, பெய்து வரும் தொடர் மழை மற்றும் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, உரிமம் பெறுவதற்கான காலக்கெடு மேலும் ஒரு வார காலத்திற்கு, அதாவது 14.12.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செல்லப் பிராணிகள் உரிமையாளர்களின் வசதிக்காக, மைக்ரோசிப் பொருத்துதல், வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. இந்தச் சேவைகளை வாரத்தின் அனைத்து நாட்களிலும், காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரைப் பின்வரும் மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்:
• திரு.வி.க. நகர் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம்
• புளியந்தோப்பு செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம்
• லாயிட்ஸ் காலனி செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம்
• நுங்கம்பாக்கம் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம்
• கண்ணம்மாப்பேட்டை செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம்
• மீனம்பாக்கம் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம்
• சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுப்பாட்டு மையம்
எனவே, செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, டிசம்பர் 14, 2025-க்குள் தங்கள் பிராணிகளுக்கான உரிமத்தைப் பெற்றுக் கொண்டு அபராதம் செலுத்துவதைத் தவிர்க்குமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.