
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தீபம் ஏற்றி வழிபடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்திருந்தது. இதற்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்கு எதிராக கோயிலின் நிர்வாகி அதிகாரி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கிடையே இன்று கார்த்திகை திருநாளில் திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் எப்போதும் போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நிதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் நீதிமன்ற அவதிப்பை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தனது உத்தரவின்படி தீபம் ஏற்றப்படாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள CISF வீரர்களை கூட்டிக் கொண்டு மனுதாரர் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடியாக உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றத்தில் திரண்ட இந்து முன்னணியினர்
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை எனக்கூறி இந்து முன்னணி அமைப்பினர் அங்கு திரண்டு போராட்டம் நடத்தினார்கள். மலை மீது ஏறுவதற்காக அவர்கள் திரண்டு வந்தனர். அப்போது காவல்துறையினர் மேலே செல்லாதபடி இரும்பு தடுப்புகளை அமைத்திருந்தனர். ஆனாலும் இந்து முன்னணி அமைப்பினர் தடுப்புகளை தள்ளிவிட்டு மேலே சென்ற முயன்றனர்.
தள்ளு முள்ளு; 2 பேர் காயம்
இதனால் அவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் பதற்றம் நிலவிய நிலையில், திருப்பரங்குன்றம் கோவில் பகுதி மற்றும் மலைப்பதி முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.