மக்களே அலர்ட்.. தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை

By Ramya sFirst Published Jun 2, 2023, 7:12 PM IST
Highlights

தமிழகத்தில் வரும் 4-ம் தேதி வரை, 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிப்பை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 02.06.2023 முதல் 06.06.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை :

02.06.2023 முதல் 04.06.2023 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

இதையும் படிங்க : தாம்பூல பையுடன் குவாட்டர் வழங்கிய நபருக்கு அபராதம் விதித்து கௌரவித்த அதிகாரிகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

கேரள – கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தெற்கு இலங்கை பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

அதே போல் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி தென்மேற்கு அரபிக் கடல், மத்திய அரபிக் கடல் குமரிக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கோவையில் கனமழை நீர் வீழ்ச்சி போல் காட்சியளித்த உக்கடம் மேம்பாலம்

click me!