தமிழக அரசு பணியாளர் தேர்வுகளில் (TNPSC) தமிழ் மொழி கட்டாயம் என்று 2021 ம் ஆண்டில் டிசம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளுக்கான ஊழியர்கள், முக்கிய அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வு மூலம் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கென போட்டி தேர்வுகள், நேர்காணல் தேர்வுகள் முறையாக நடத்தப்படுகிறது. அரசு பணிகள் அதனதன் தகுதியின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4, குரூப் 5,6,7,8 முறையே போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற 'தமிழ்' முக்கியமாக கருதப்படுகிறது. அதாவது தமிழ் மொழி நன்கு கற்று அறியாதோர் அரசு உயர் பணிகளில் நியமிக்கப்படுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குரூப்-2 , 2-A ஆகிய தேர்வில் தமிழ் தெரியாதவர்கள் தேர்ச்சியடைய முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. அதற்கேற்ற மாதிரி பாடத்திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. #2YrsOfDravidianModel
undefined
பாடத்திட்டம்
இந்த பாடத்திட்டங்களில் உலக பொதுமறையாக போற்றப்படும் திருக்குறள், தமிழக வரலாறு, பாரம்பரியம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் மொழிபெயர்ப்பு ஆளுமையை வளர்த்தெடுக்கும் விதமாக தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிப்பெயர்க்கவும் முதன்மைத்தேர்வில் (prilims) 100 மதிப்பெண்களுக்காக வினாத்தாள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சமாக 40 மதிப்பெண்கள் கட்டாயம். இந்த கட்டாய தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் அடுத்த மெயின்ஸ் தேர்வு தாள் திருத்தப்படாது என்பது விதி. எந்த நிபந்தனைகளும் இல்லாமல் அவர்கள் நிராகரிக்கப்படுவார்கள்.
கெடுபிடி
இதே நிலை தான் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (Tamil Nadu Uniformed Services Recruitment Board) நடத்தும் தேர்வுகளுக்கும். காவல் ஆய்வாளர், காவலர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிப்போர் கட்டாய தமிழ் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களுடைய மெயின் பேப்பர் திருத்தப்படும். இல்லையென்றால் நிராகரிக்கப்படும். #2YrsOfDravidianModel
தேர்வில் இப்படி கெடுபிடி காட்டுவதே தமிழ் எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்கள் மட்டுமே குரூப் தேர்வுகள், காவல்துறை தேர்வுகள் எழுத வேண்டும் என்பது தான். இதனால் தமிழ்நாடு அரசு பணியிடங்களுக்கு வருபவர்களுக்கு தமிழ் கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
யாருக்கு லாபம்?
தமிழ்நாடு அரசின் இந்த அரசாணையின் பயனாக வெளி மாநிலத்தவர்கள், தாய்மொழியான தமிழ் மொழியில் கூட அடிப்படை விஷயங்கள் தெரியாதவர்கள் அரசுப் பணிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்னொரு புறம், அரசு பள்ளிகளில் பயிலும் எளிய மக்களுக்கு இந்த வாய்ப்பு உதவிகரமானதாகவும் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டு மக்களை மனதில் கொண்டு இந்த முடிவை சமீபத்தில் அரசு எடுத்து இருந்தது. மத்திய அரசு பணிகளில் பெரிய அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காதபோது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அனைத்து வகையிலும் சமூக பாதுகாப்பை அளிக்கும் வகையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் என்றும் திருக்குறள், தமிழக வரலாறு, பாரம்பரியம் பற்றி மாணவர்கள் அறிந்து இருக்கவும், அழியாமல் காக்கவும் முத்தான முடிவை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்துள்ளது. #2YrsOfDravidianModel