முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 2023ஆம் ஆண்டு, மே 7ஆம் தேதியுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 2021 மே 7 ஆம் தேதி மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, கல்வி, சுகாதாரம், ஊட்டசத்து முதலிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தபட்டு வருகின்றன. கல்வியும் மருத்துவமும் திமுக அரசின் இரண்டு கண்கள் என்று கூறியுள்ள முதலமைச்சர், அதன்படி செயல்பட்டும் வருகிறார்.
கொரோனா கட்டுப்பாடு
கொரோனா பரவல் முடிவுக்கு வராத நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. சவாலான ஒரு சூழலில் கொரோனா தொற்றை திறம்படக் கையாள, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தவர்களின் சிகிச்சைக் கட்டணத்தை காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றதும் கையெழுத்திட்ட முதல் ஐந்து உத்தரவுகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணமாக, 977 கோடி ரூபாய் செலவில் 13 பொருட்கள் 2.15 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. #2YrsOfDravidianModel
undefined
மக்களைத் தேடி மருத்துவம்
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிவைத்தார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். நீரிழிவு, இரத்த அழுத்தம், இதயக்கோளாறுகள் உள்பட்ட நோய்களுக்கு, நேரடியாக வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளித்து, மருந்து மாத்திரை வழங்கப்படுகிறது. தொற்றா நோய்களைத் தடுக்கும்வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதுவரை சுமார் ஒரு கோடி பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48
‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ எனும் திட்டம், 2021 டிசம்பரில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டிற்குள் சாலை விபத்துகளில் காயமடைவோருக்கு, விபத்து நேர்ந்தது முதல் 48 மணி நேரம்வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் இத்திட்டத்தில் பலன் கிடைக்கிறது. இத்திட்டத்தில் பயன்பெற வருமான வரம்பும் விதிக்கப்படவில்லை என்பது முக்கியமானது.
பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை
சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு, விரைவில் திறப்பு விழா நடைபெறவுள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி, 1000 படுக்கை வசதியுடன் 230 கோடி ரூபாயில், ஆறு தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பில் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 5ஆம் தேதி இந்த மருத்துவமனையைத் திறந்துவைக்க உள்ளார்.
இதையும் படியுங்கள்... தேர்தலில் கொடுத்த வாக்குறுதியான 'வேளாண்மைக்கு தனி பட்ஜெட்' சாத்தியமானது திமுக ஆட்சியில்!!
ரூ.2,000 கோடியில் மருத்துவக் கட்டமைப்பு
மாநிலம் முழுவதும் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டத் திட்டமிடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டமைப்புத் திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார். அப்போது, 44 புதிய மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. #2YrsOfDravidianModel
4,300 மருத்துவர் நியமனம்
4,308 மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வானவர்களுக்கு ஏற்கெனவே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. சித்தா, ஆயுர்வேதா மருத்துவத் துறைகளில் காலிப் பணியிடங்களே இல்லாத அளவுக்கு முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன.
காலை உணவுத் திட்டம்
அரசுப் பள்ளி மாணவர்களின் பசி,ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கி, அவர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில், 2022ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த செப்டம்பர் 15ஆம் தேதி அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இல்லம் தேடிக் கல்வி திட்டம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2021ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலமாக, கொரோனா பொது முடக்கத்தால் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலையில் இருந்த- 1 முதல் 8 வகுப்புகள்வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு பக்கத்திலேயே அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் மையங்கள் தொடங்கப்பட்டன.
இதையும் படியுங்கள்... மத்திய அரசு பணிகளுக்கு தமிழில் தேர்வு...நிறைவேறிய மு. க. ஸ்டாலின் கோரிக்கை
நான் முதல்வன் திட்டம்
“நான் மட்டும் முதல்வர் அல்ல, நீங்கள் அனைவரும் ஒவ்வொரு துறையில் முதல்வன் ஆக வேண்டும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் பிறந்தநாளில் உருவாக்கிய திட்டமே, ‘நான் முதல்வன்’ திட்டம். 9ஆவது முதல் 12 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டல்களை வழங்கவும், வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை அறிவிக்கவும் இந்தத் திட்டத்தின் கீழ் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி உதவித்தொகை, கல்விக்கடன் பெறுவது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. #2YrsOfDravidianModel
பள்ளி மேம்பாட்டுத் திட்டம்
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 12,300 கோடி ரூபாய் செலவில் 26,000 புதிய வகுப்பறைகள் கட்டும் திட்டத்தை, கடந்த பிப்ரவரியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். முதல் கட்டமாக, மாநிலம் முழுவதும் உள்ள 2,381 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 784 கோடி ரூபாய் செலவில் 5,351 வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. இதைத் தொடர்ந்து ரூ.1000 கோடி மதிப்பிட்டில் பெருந்தலைவர் காமராசர் கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டம் 2023-24 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மேலாண்மைக் குழுக்கள்
பள்ளி மேலாண்மைக் குழுக்களைப் புதுப்பித்து வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள திமுக அரசு, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... திமுக ஆட்சியில் சமூக நீதிக்கான சட்ட போராட்டங்களும்; வெற்றியும்!!
அனைவருக்கும் ஐ.ஐ.டி.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆராய்ச்சித் திறனை உருவாக்கும் நோக்கில் அனைவருக்கும் ஐ.ஐ.டி. எனும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10ஆம் வகுப்பு மாணவர்கள் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி. போன்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் மூலம் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இந்த மாணவர்கள் பள்ளிப்படிப்பை நிறைவுசெய்யும்வரை மாதம்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இவர்கள் தொடர்ந்து இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்குச் செல்லும்போதும் ஆண்டுதோறும் ரூ.12,000 உதவித்தொகையும் பெறுவார்கள்.
பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலி உருவாக்கப்பட்டு, பள்ளிக்கு வராத மாணவர்களைக் கணக்கெடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்ல வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. 2022-23 கல்வியாண்டு முதல் எண்ணும் எழுத்தும் இயக்கம் 1ஆவது முதல் 3ஆம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. #2YrsOfDravidianModel
அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையானதாக தரம் உயர்த்தும் நோக்கில், 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நம்ம ஊர் பள்ளி’ திட்டத்தின் கீழ், தனியார் நிதி நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி திரட்டப்பட்டு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
இளந்தளிர் இலக்கியத் திட்டம்
குழந்தைகளின் பேச்சு, எழுத்து, ஓவியம் உள்பட்ட படைப்பாற்றலை ஊக்குவிக்க, இளந்தளிர் இலக்கியத் திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், முதற்கட்டமாக தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் பணிகள் கழகம் சார்பாக 100 குழந்தை இலக்கிய நூல்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு, வரிசையாக புத்தகங்கள் தயாராகிவருகின்றன.
பிற கல்வித் திட்டங்கள்
பள்ளி மாணவர்களுக்கு பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சிப் புத்தகங்கள், அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க ‘மாணவர் மனசு’ பெட்டி, ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், வெளி மாநிலத்தவர்கள், அயல்நாட்டினர்க்கு தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் தமிழைக் கற்பிக்க ஏற்பாடு, அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை என பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன.
ஊட்டச்சத்தை உறுதி செய்
இன்னும் சிறப்பாக, 2022ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் மூலம், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் மருத்துவப் பரிசோதனைகள் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு கண்டறியப்பட்டு தேவைப்படும் சிகிச்சை வழங்கவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.
புதிய சத்து மாவுத் திட்டம்
ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் சுவையுடனும் அதிகமான புரதச்சத்துடனும் வெள்ளை, நீலம், இளஞ்சிவப்பு ஆகிய 3 நிற மாவு பாக்கெட்டுகளில் வகைபிரித்து வழங்கப்படுகின்றன. இந்திய தர நிர்ணயக் கழகத்தின் முத்திரையுடன் இந்தச் சத்துமாவு பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன. #2YrsOfDravidianModel
ஆறு மாதம் முதல் 2 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு வெள்ளை நிற சத்துமாவு பாக்கெட்டும், 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இளஞ்சிவப்பு நிற சத்துமாவு பாக்கெட்டும், கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு நீல நிற சத்துமாவு பாக்கெட்டும் கொடுக்கப்படுகிறது. 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் சத்துமாவை ஆர்வத்துடன் உண்ணும்படியாக, வெண்ணிலா, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி சுவை கொண்ட சத்துமாவு தயாரித்து வழங்கப்படுகிறது. இப்படி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதையும் படியுங்கள்... தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் கட்டாய தமிழ் தேர்ச்சி! ஏன் தமிழுக்கு இவ்வளவு முக்கியத்துவம்?