
தமிழகம் கல்வியில் இந்தியாவுக்கு முன்னோடியாக உள்ளது. தொடர்ந்து கல்வியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்து விளக்கும் வகையில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டு உள்ளரங்கில் நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிவகுமார், இயக்குநர்கள் பிரேம் குமார், ஞானவேல், கிரிக்கெட் வீரர் நடராஜன், தமிழக அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் தொடகக்த்தில் தமிழக அரசு கல்விக்காக செய்த சாதனைகள் குறித்து வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் காலை உணவுத் திட்டம் குறித்து விளக்கப்பட்டது. இதற்காக காலை உணவுத் திட்டத்தில் பயனடையும் பள்ளிக் குழந்தைகள் மேடைக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது பேசிய குழந்தைகள், ''காலை உணவுத் திட்டத்தின் மூலம் எங்களுக்கு சோறு போடும் முதல்வர் ஸ்டாலின் அப்பாவுக்கு நன்றி'' என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து
தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களும் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். ''காலை உணவு திட்டத்தின் மூலம் எங்கள் குழந்தைகள் இனிமேல் பட்டினியாக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கிறது'' என்று குழந்தைகளின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
சாம்பார் சாதத்தை ருசித்த டிடி, அமைச்சர்
தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் டிடி, காலை உணவுத் திட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்காக சமைக்கப்பட்ட சாம்பார் சாதத்தை சாப்பிட்டார். இதேபோல் அமைச்சர் மதிவேந்தனும் அந்த சாம்பார் சாதத்தை சாப்பிட்டு ருசியாக இருக்கிறது என்று தெரிவித்தார். இதன்பின்பு நான் முதல்வன் திட்டம் குறித்து விளக்கப்பட்டது. இந்த திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகள் தாங்கள் அடைந்த பயன்கள் குறித்து பேசினார்கள்.