
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை விமர்சித்த அவர், ''பிச்சைக்காரன் ஒட்டு போட்ட சட்டை போட்டிருப்பார் அல்லவா? அதுபோல் செல்வபெருந்தகை பல கட்சிகளில் இருந்தவர். அப்பப்போ எந்த கட்சியில் இருப்பாரோ அந்த கட்சியின் கொள்கையை பின்பற்றுவார். மற்ற காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சியில் பங்கு கேட்டு வருகின்றனர். இவரோ திமுகவுக்கு விசுவாசமாக இருக்கிறார்'' என்றார்.
இதற்கு எடப்பாடிக்கு கண்டனம் தெரிவித்த செல்வபெருந்தகை, ''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை 'பிச்சைக்காரன்' என்று இழிவுபடுத்துவது, ஒரு தனிநபரை பழிக்கிற செயல் மட்டுமல்ல, இது கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும்'' என்று கூறியிருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஜோதிமணி, ''காங்கிரஸ் கட்சியின் அரசியல்,கூட்டணி நிலைப்பாடு குறித்துப் பேச அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் கிடையாது. பொதுவாழ்வில் நாகரிகமாகவும்,கண்ணியமாகவும் பேசவேண்டும் என்கிற அடிபடை அரசியல் புரிதல் கூட இல்லாமல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை பிச்சைக்காரன் என்று தரம்தாழ்ந்த முறையில் விமர்சிப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.
எடப்பாடி மன்னிப்பு கேட்க வேண்டும்
இதற்காக எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு தமிழ்நாட்டு அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக இருந்த அஇஅதிமுக இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜகவிடம் கையேந்தி நிற்கிறது. இன்றைய சூழலில் அதிமுகவிற்கு உண்மையான முதலாளி பாஜக தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பிச்சைக்காரனா?
அதிமுகவை உடைத்து பலவீனப்படுத்த அனைத்து அஸ்திரங்களையும் வெளிப்படையாகவே பிரயோகிக்கும் பாஜகவை கண்டிக்கக் கூட முடியாமல்,அவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது? ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிடியின் தலைவராக இருந்தால் அவரை பிச்சைக்காரன் என்று பேசுவீர்களா?
சாதிய வன்மம்; தோல்வி பயம்
இது உங்களின் தரம் தாழ்ந்த அரசியலையும், சாதிய வன்மத்தையும், தோல்வி பயத்தையும் தான் காட்டுகிறதே தவிர வேறொன்றும் இல்லை. பாஜகவிடம் கூட்டணி சேர்ந்த கட்சிகள் எல்லாம் மண்ணோடு புதைக்கப்பட்டுவிட்டன என்பது தான் வரலாறு. அந்த வரலாற்றை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்திக்க இருக்கிறது. அதை மறைக்கவே அவர் மற்ற கட்சிகள் பற்றியும் தலைவர்கள் பற்றியும், தரம் தாழ்ந்த முறையில் பேசிவருகிறார். தரம் தாழ்ந்த அரசியலை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்பதை வரும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் புரியவைக்கும்'' என்று கூறியுள்ளார்.