
திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை அடுத்த ஆவல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூபதி, மாது ஆகிய இருவருக்கும் 30 சென்ட் விவசாய நிலம் சம்மந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு பூபதியை மாது சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த பூபதி சில மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.
சொத்து பிரச்சனை
இதனால் மன வேதனை அடைந்த பூபதியின் மகன் திருப்பதி (25) அப்பாவை அடித்த சித்தப்பாவை வெட்டியே ஆக வேண்டும் என்ற ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் காக்கங்கரை பேருந்து நிறுத்தம் அருகே மாது பானிபூரி சாப்பிட சென்றுள்ளார். மாதுவை நோட்டமிட்ட திருப்பதி பானிபூரி சாப்பிடும் இடத்திற்கு சென்று தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து கை, தலை, உடல் என பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அவரது மனைவி கணவன் ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு அழுது கதறினார்.
சித்தப்பாவுக்கு சரமாரி வெட்டு
இதனையடுத்து அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மாதுவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தலைமறைவான திருப்பதி
இந்த சம்பவம் குறித்து கந்திலி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து பிரச்சனைக்காக சித்தப்பாவை சரமாரியாக வெட்டி விட்டு தலைமறைவாக உள்ள திருப்பதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.