
SSI Murder In Udumalaipettai: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உடுமலைப்பேட்டை அருகேயுள்ள சிக்கனூத்து கிராமத்தில் அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படு ஒரு பண்ணைத் தோட்டத்தில் வசித்து வரும் மூர்த்தி மற்றும் அவரது மகன்களான தங்கப்பாண்டி, மணிகண்டன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
சிறப்பு உதவி ஆய்வாளர் கொடூர கொலை
மதுபோதையில் இருந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் ஒருவரையொருவர் தாக்கியுள்ள நிலையில், இது குறித்து குடிமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (57) அங்கு விசாரணைக்கு சென்றார். அவர் அந்த மோதலை தடுக்க முயன்றார். அப்போது மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் அவரை கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் சண்முகவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
முதல்வர் ஸ்டாலின் ரூ.1 கோடி நிதியுதவி
ஒரு போலீஸ் அதிகாரியே கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டதாக அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. சண்முகவேலின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும், அவரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
தந்தை, மகன் போலீசில் சரண்
சண்முகவேலை கொலை செய்து விட்டு தப்பியோடிய மூர்த்தி, தங்கப்பாண்டி மற்றும் மணிகண்டனை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், சண்முகவேலை வெட்டி கொன்ற மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாலை சரண் அடைந்தனர். அதே வேளையில் மணிகண்டன் சரணடையவில்லை. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உடல் தகனம்
சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் உடற்கூறாய்வு முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு மேற்கு மண்டல காவல் துறை தலைவர் செந்தில்குமார். மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் சண்முகவேல் உடலுக்கு காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய காவல் துறையினரும் சண்முகவேல் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இதன்பிறகு சண்முகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது.