நீதிபதிகள் நியமனத்திற்கு நீட் தேர்வை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் - ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன்…

 
Published : Jun 13, 2017, 07:20 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
நீதிபதிகள் நியமனத்திற்கு நீட் தேர்வை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் - ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன்…

சுருக்கம்

Tamil Nadu government should completely reject the selection of judges - Coordinator Sivasubramanian ...

தஞ்சாவூர்

கீழ்நீதிமன்ற நீதிபதிகள் பணி நியமனத்துக்கு நீட் தேர்வு போன்று ஒரே மாதிரியான தேர்வு நடத்தும் மத்திய அரசு திட்டத்தை மாநில அரசு முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் கூறினார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் தஞ்சையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அதில், “பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை பதிவு செய்வது தொடர்பான சட்டவிதிகள் மற்றும் நீதிமன்ற முத்திரைக் கட்டண உயர்வு குறித்து தமிழக அமைச்சர்களை சந்தித்து எங்களது கோரிக்கைகளை தெரிவிக்க மூன்று மாதங்களாக காத்திருந்தோம். அனுமதி கிடைக்கவில்லை.

இதனால் பிறப்பு, இறப்பு தொடர்பான சட்டவிதிகள், நீதிமன்ற முத்திரைக் கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 16-ஆம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதுடன் தஞ்சை வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

அதன்பின்னரும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும்.

கீழ்நீதிமன்ற நீதிபதிகள் பணி நியமனத்துக்கு நீட் தேர்வு போன்று ஒரே மாதிரியான தேர்வு நடத்துவது குறித்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது. இந்த தேர்வால் இளம் வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவார்கள்.

பிற்படுத்தப்பட்ட வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்களுக்கான இடஒதுக்கீடு தடைபட்டுவிடும். எனவே, இந்தத் தேர்வு தேவையற்றது. மத்திய அரசின் யோசனையை மாநில அரசு முழுமையாக நிராகரிக்க வேண்டும்.

வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி சம்பந்தமாக வழக்கறிஞர்கள் செலுத்த வேண்டிய ரூ.32 கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

நீதிமன்றக் கட்டணம், நீதிமன்றத்தால் விதிக்கப்படும் அபராதம் ஆகியவற்றில் இருந்து 20 சதவீதத்தை வழக்கறிஞர்கள் சேமநல நிதியில் சேர்க்க வேண்டும்.

அல்லது தமிழக அரசு வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு ரூ.4 கோடி வழங்கி வருவதற்கு பதிலாக ரூ.20 கோடி வழங்க வேண்டும். அதில் இருந்து இறந்த வழக்கறிஞர்கள் குடும்பத்துக்கு ரூ.15 இலட்சம் வழங்கிடவும், இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கிடவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விபத்து வழக்குகள் தொடர்பாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தத்தை கண்டிப்பதுடன், அவற்றை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்” என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!