
சிவகங்கை
சிவகங்கையில் உள்ள ஆங்கிலப் படப் பாணியில் சாராயக் கடையின் சுவற்றில் ஓட்டைப்போட்டு ரூ.6 இலட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்சிவல்பட்டி, பெரிய கடை வீதியில் டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலை முடிந்து டாஸ்மாக் சாராயக் கடை ஊழியர்கள் கடையை மூடிவிட்டுச் சென்றனர்.
நேற்று காலை டாஸ்மாக் சாராயக் கடையை விற்பனையாளர் கண்ணதாசன் திறந்து பார்த்தபோது, கடையின் சுவரில் ஓட்டைப் போட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் பண பெட்டியில் இருந்த ரூ.6 இலட்சமும் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ந்தார்.
இரவு கடை மூடப்பட்ட பிறகு மர்ம கும்பல்தான் கடையின் சுவரில் ஓட்டைப்போட்டு உள்ளே புகுந்து கடையில் இருந்த ரூ.6 இலட்சத்தை கொள்ளையடித்து இருக்கவேண்டும் என்று யூகித்த கண்ணதாசன் உடனடியாக கீழச்சிவல்பட்டி காவலாளர்களுக்குத்ஹ் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் விரைந்து வந்த காவலாளர்கள் கடையில் பணம் கொள்ளைப் போனது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் முருகன், கொள்ளை நடந்த டாஸ்மாக் சாராயக் கடையை ஆய்வு செய்தார்.
மேலும் சிவகங்கை தடயவியல் துறை துணை கண்காணிப்பாளர் முருகானந்தம் தலைமையிலான குழுவினர் தடயங்களை சேகரித்தனர்.
இதேபோல் டாஸ்மாக் சாராயக் கடையின் மேற்பார்வையாளர் கதிரேசன், மேலாளர் செல்வராஜ் ஆகியோர் கடையின் இருப்புக் குறித்து சரிபார்ப்பு மேற்கொண்டனர்.
பின்னர் இவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழச்சிவல்பட்டி காவலாளர்கள் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.