
நீதிபதி கர்ணனை கண்டுபிடிக்க போதிய ஒத்துழைப்பை தமிழக காவல்துறை வாளங்க வேண்டும் என மேற்கு வங்க டிஜிபி தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த கர்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். அப்போது அப்போதைய வழக்கு ஒன்றில் தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கர்ணன் தடை உத்தரவு பிறப்பித்தார்.
இதனால் கர்ணன் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன்கவுல் உள்பட பல நீதிபதிகள் ஊழல் செய்வதாக கர்ணன் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.
இவரின் இந்தச் செயல்பாடு, நீதிமன்றத்தை அவமதிப்பதாக கருதி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. மேலும் கர்ணனை நேரில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்தது.
இதனால் ஆத்திரமடைந்த கர்ணன் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அமர்வுக்கு எதிரான உத்தரவுகளை பிறப்பித்தார்.
இதை தொடர்ந்து நீதிபதி கர்ணனின் மனநலம் குறித்து, கொல்கத்தா அரசு மருத்துவர்கள் பரிசோதனை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மனநலப் பரிசோதனைக்கு கர்ணன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே உச்சநீதிமன்றத்தை அவமதித்ததால் அவரை கைது செய்ய கொல்கத்தா போலீசாருக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
ஆனால் நீதிபதி கர்ணனை கைது செய்ய போலீசார் சென்னை வந்த போது அவர் தலைமறைவாகிவிட்டார். இதுவரை நீதிபதி கர்ணனை கைது செய்ய முடியவில்லை.
இதனிடையே கர்ணனின் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பணியின் பதவிகாலம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து இன்று அவர் ஒய்வு பெறுகிறார்.
இந்நிலையில், நீதிபதி கர்ணனை கண்டுபிடிக்க போதிய ஒத்துழைப்பை தமிழக காவல்துறை வாளங்க வேண்டும் என மேற்கு வங்க டிஜிபி தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேடியும் நீதிபதி கர்ணனை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், ஆனால் அவர் தமிழகத்தில் தான் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.