
சிவகங்கை
கழிப்பறை கட்ட அரசு வழங்கும் நிதியைவிட கூடுதல் செலவாவதால் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் கூலித் தொழிலாளர்களின் சம்பளத்தில் ரூ.5 ஆயிரம் பிடித்தம் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சிவகங்கை ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமைத் தாங்கினார். இதில், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரப்பெற்ற மனுக்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், குடும்ப அட்டை கோருதல், அடிப்படை வசதிகள் கோரி வரப்பெற்ற மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் போன்ற 248 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு ஆட்சியர் மலர்விழி அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மேலமங்களத்தை சேர்ந்த ஒரு பயனாளிக்கு சலவை பெட்டியை ஆட்சியர் வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தேவகோட்டை தாலுகா வீரை ஊராட்சியைச் சேர்ந்த வேலாயுதபட்டினம் கிராம விவசாய கூலித் தொழிலாளர்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில், “வீரை ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதபட்டினம், எத்தினி, நடுவீரை, வெற்றியாளங்குளம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை பார்த்து வருகிறோம்.
தற்போது வீடுகளில் குடும்ப அட்டை அடிப்படையில் தனிநபர் கழிப்பறை கட்டப்படுகிறது. இந்தத் திட்டத்தில் கழிப்பறை கட்ட அரசு வழங்கும் நிதியை விட கூடுதல் செலவாகிறது என்பதற்காக நூறு நாள் வேலைத் திட்டத்தில் ரூ.5 ஆயிரம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறுகின்றனர்.
இவ்வாறு செய்தால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பணம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் கூறியிருந்தனர்.
இதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.