
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
ஆண்டுதோறும் பல லட்சம் இளைஞர்கள் வேலை தேடி பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றனர். அந்த வகையில் தனியார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பை இளைஞர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் அந்த அந்த மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 8வது படித்தவர்கள் முதல் டிகிரி படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு பயிற்சி வழங்கி கடன் உதவிக்கான வழியும் காட்டப்படுகிறது.
அரசு பணிக்கு தயாராகும் இளைஞர்கள்
இந்தநிலையில் மத்திய மற்றும் அரசு பணியில் சேரும் வகையில் படிப்பை முடித்த இளைஞர்கள் தனியார் பயிற்சி நிறுனங்கள் மூலமாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். டிஎன்பிஎஸ்சி தேர்விற்கும் தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் தனியார் பயிற்சி முகாமில் பல ஆயிரங்கள் கொடுத்து பயிற்சி எடுக்க முடியாதவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் படி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக முன்னனி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணக்கர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு பயிற்சியினை வழங்கவுள்ளது.
இலவச பயிற்சி- தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Group-II & IIA முதல் நிலை தேர்வில் (Preliminary exam) தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்விற்கு (Main) தேர்ச்சி பெற விரும்பும் மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியினை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தாட்கோ மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி தெரிவித்துள்ளார்.