
Large green park on 100 acres in the Guindy Race Club : தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு தினந்தோறும் பல லட்சம் மக்கள் சுற்றுலாவிற்காக வந்து செல்கிறார்கள். வேலைக்காக தங்கவும் செய்கிறார்கள். எனவே நாளுக்கு நாள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் தொகை எண்ணிக்கை உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் மக்களுக்கு பொழுதுபோக்க இடத்தையும் கட்டமைக்கும் தேவை அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தளமாக இந்தியாவின் மிக நீளமான மற்றும் உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா கடற்கரை உள்ளது. இது சென்னையின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும், உள்ளூர் மக்களின் பொழுதுபோக்கு இடமாகவும் உள்ளது.
சென்னையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான மகாபலிபுரம், கடற்கரைக் கோயில், பஞ்ச ரதங்கள், புலி குகை போன்றவற்றிற்கு பிரபலமாக உள்ளது. சென்னையிலிருந்து 73 கி.மீ. தொலைவில் உள்ள இந்த பறவைகள் சரணாலயம், 35,000-க்கும் மேற்பட்ட பறவைகளை ஈர்க்கிறது. இயற்கை ஆர்வலர்களுக்கு இது ஒரு முக்கிய பயண தளமாக உள்ளது. அடுத்தாக கலைஞர் நூற்றாண்டு பூங்கா சென்னை கதீட்ரல் சாலையில், தோட்டக்கலைத் துறையின் 6.09 ஏக்கர் நிலத்தில் ரூ.46 கோடி செலவில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இசை நீரூற்று, பறவையகம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் இது பொதுமக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் இடமாக உள்ளது.
கிண்டி தேசிய பூங்காவானது 2.71 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மாநகரங்களில் நகர எல்லைக்குள் உள்ள ஒரே தேசிய பூங்காவாகும். மான், குரங்குகள், பறவைகள் மற்றும் பல்வேறு தாவர இனங்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெகுவாக கவர்ந்து வருகிறது. சென்னை மக்களை மட்டுமல்ல சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் பூங்க செம்மொழி பூங்கா 8.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த பூங்கா, கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கு எதிரே உள்ளது. தாவரவியல் மற்றும் கலாச்சார அம்சங்களை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் இடமாக விளங்குகிறது.
இந்த நிலையில் சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தகை வழங்கப்பட்ட நிலம் மீட்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா, பசுமை பரப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டு, அரசு புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்ட, 4,832 கோடி ரூபாய் மதிப்பிலான, 118 ஏக்கர் நிலம், தோட்டக்கலைத் துறையிடம், நில மாற்ற முறையில் ஒப்படைக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கிளப் நிறுவனத்திடம் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கர் நிலத்தில், தமிழ்நாடு அரசு பிரமாண்ட பசுமை பூங்காவை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையும், வடிவமைப்பையும் தயாரிக்க தோட்டக்கலைத்துறை டெண்டர் மூலம் வழங்க உள்ளது. நகரமயமாக்கல் மற்றும் பெருகும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, மக்களின் ஒய்வு நேரம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக இந்த பூங்கா உருவாக்கப்படுகிறது. அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.4,832 கோடியாகும். இந்த நிலம் தற்போது தோட்டக்கலைத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் மலர் படுகைகள், மலர் சுரங்கப்பாதை, கண்ணாடி மாளிகை, பறவைகள் பார்க்கு, வண்ணத்துப்பூச்சி தோட்டம், மூலிகை குன்றுகள், குழந்தைகள் விளையாட்டு மையம், நடைபாதைகள், வாடிக்கையாளர்களுக்கான அம்சங்களுடன் கூடிய பொது மண்டபங்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. இது, சென்னைக்குள் அமைக்கப்படும் மிகப்பெரிய பசுமை பூங்காவாகும். மக்களுக்கு இயற்கையை அனுபவிக்க, ஓய்வெடுக்க, மற்றும் மனஅமைதியை பெறும் இடமாக இது மாறும்.
மக்கள் உடற்பயிற்சி செய்ய, குடும்பத்துடன் நேரம் செலவிட ஏற்ற இடமாக இப்பூங்கா இருக்கும்.
பசுமை பரப்பு காற்று மாசுபாட்டைக் குறைத்து, நகரின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த உதவும்.
வண்ணத்துப்பூச்சி தோட்டம், பறவைகள் இடம் போன்றவை உயிரினங்களின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும்.
மலர் சுரங்கப்பாதை, கண்ணாடி மாளிகை, தாவரவியல் காட்சியகங்கள் மூலம் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு இயற்கை குறித்த கல்வி கிடைக்கும்.
பசுமையான சூழல் மன அழுத்தத்தைக் குறைத்து, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இப்பூங்கா உள்ளூர் வணிகத்திற்கு உதவும்.
சென்னையின் அழகை மேம்படுத்தி, நகரின் மதிப்பை உயர்த்தும்.