இனி டாஸ்மாக்கில் சரக்குக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கினால் நிரந்தரமாக வேலை போச்சு..! ஊழியர்களுக்கு எச்சரிக்கை

By Ajmal KhanFirst Published Sep 17, 2023, 10:47 AM IST
Highlights

டாஸ்மாக் மதுபான கடையில் மதுபானத்திற்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கினால் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு எச்சரித்துள்ளது
 

மதுபான விற்பனை- உத்தரவு

டாஸ்மாக்கில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக தொடர்ந்து புகார் வந்ததையடுத்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து டாஸ்மாக் மதுபான விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மதுபானங்கள் கூடுதல் விலை விற்பனை தொடர்பாக வழங்கப்பட்ட அறிவுரைகள் அடிப்படையில்,

மதுபான சில்லறை விற்பனைக் கடைப்பணியாளர்களுக்கு மேற்படி அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. எனவே அனைத்து கடைப்பணியாளர்களும் கீழ்க்காணும் அறிவுரைகளை தவறாது பின்பற்றி பணிபுரியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மதுபானம் கூடுதல் விலைக்கு விற்றால்

மதுபான சில்லறை விற்பனைக் கடைப்பணியாளர்கள் மதுபானம் மற்றும் பீர் வகைகளை அரசு நிர்ணயித்த விலையின்படியே விற்பனை செய்யப்பட வேண்டும். கூடுதல் விலை விற்பனை ஏதும் செய்யக்கூடாது. அவ்வாறு கூடுதல் விலை விற்பனை ரூ.10/- கண்டறியப்படும் பட்சத்தில் விற்பனை செய்த கடை விற்பனையாளர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார். மேலும் கூடுதல் விலை விற்பனை செய்வதை தடுக்க தவறிய சம்மந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் மீது துறைரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுபான சில்லறை விற்பனைக் கடை மேற்பார்வையாளர்கள் கடையின் வேலை நேரம் நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஆஜரில் இருக்க வேண்டும்.

நிரந்தரமாக பணி நீக்கம்

கடையினை விட்டு வெளியே செல்லும் போது நகர்வுப் பதிவேட்டில் உரிய காரணத்தை பதிவிட்டுச் செல்ல வேண்டும். அனைத்து கடை மேற்பார்வையாளர்களும் கடையில் அதிக விற்பனையாகும் நேரமான மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கண்டிப்பாக கடையில் இருக்க வேண்டும். அவ்வாறு கடைப்பணியில் ஆஜரில் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த மேற்பார்வையாளருக்கு விளக்கம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்படும். மேலும் இரண்டாவது முறை கடைப்பணியில் மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஆஜரில் இல்லாத பட்சத்தில் விற்பனை குறைவான கடைக்கு பணிமாறுதல் செய்ய முதுநிலை மண்டல மேலாளர் அவர்களுக்கு பரிந்துரை செய்யப்படும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

தக்காளி விலை கூடியதா.? குறைந்ததா.? கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை என்ன.?

click me!